திமுக மீது விமர்சனம் இருந்தாலும் கூட்டணியில் தொடர காரணம் இதுதான் - திருமாவளவன் விளக்கம்
சீட் எண்ணிக்கை மாறுவதால் நான் முதல்வராக போவதில்லை என திருமாவளவன் பேசியுள்ளார்.
திருமாவளவன்
மதுரையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நடிகர் சசிகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம்உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன், "திமுகவை நான் உயர்த்திப் பிடிப்பதாக சிலர் விமர்சிக்கிறார்கள். திமுக மீது எங்களுக்கும் விமர்சனம் உண்டு.
வேங்கைவயல் உட்பட பல தலித் மக்கள் பிரச்னைகளின்போது எனக்கு திமுக அரசின் மாறுபட்ட விமர்சனங்கள் வந்தது உண்டு. ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறோம்.

இந்த ஆட்சியில் அரசுக்கும், காவல்துறைக்கும் எதிராக எங்களைப் போல் போராடியவர்கள் யாருமில்லை. தேர்தல் களத்தில் நின்று, மக்களுக்கு உண்மையாகவும் அதேவேளையில் ஏற்ற கொள்கைக்கு பாதிப்பு ஏற்படாமலும், கட்சி வலிமையோடு செயல்படுவதற்கு ஏற்ப முடிவு எடுக்க வேண்டியுள்ளது.
திமுக கூட்டணியில் தொடர காரணம்
எத்தனை சீட் பெறுகிறோம் என்பது பிரச்சினை இல்லை. சீட் எண்ணிக்கை மாறுவதால் நான் முதலமைச்சர் நாற்காலியில் போய் அமரப் போவதில்லை. பதவி எனக்குப் பெரிதல்ல, 10 சீட் கூடுதலாக வாங்குவதால் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடாது.
சீட் தான் வேண்டும் என்றால் அதை அதிகமாகத் தருகிற கட்சியோடு போய் சேரலாம் அல்லவா? இவ்வளவு விமர்சனங்களுக்கு பின்னரும் திமுக கூட்டணியில் தொடர்வதற்கு காரணமே பதவி ஆசை இல்லாததுதான்" என தெரிவித்துள்ளார்.