திருச்சி கிழக்கில் போட்டி? விஜய்யிடம் தெரிவித்த திருமாவளவன்
திருச்சி கிழக்கில் திருமாவளவன் போட்டியிட உள்ளதாக வெளியான தகவலுக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்
திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மேலும், 4 அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதில், தவெக சார்பில் லால்குடியில் போட்டியிட்டு தோற்ற கு.ப.கிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் போட்டியிடலாம் என தகவல் வெளியானது.
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
இதில் பேசிய அவர், "நான் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெறவில்லை என்றாலும் கூட என்னால் அமைச்சரவையில் சேர முடியும். தவெக தரப்பில் இருந்தும் அப்படி அழைப்பு விடுக்கப்பட்டது. திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்றெல்லாம் ஆலோசனை வழங்கினார்கள்.

எனக்கு பதவி ஆசை இருந்திருந்தால் நான் அதனையெல்லாம் ஏற்றுக் கொண்டிருக்க முடியும். இப்போதும் திருச்சி கிழக்கு தொகுதியில் திருமாவளவன் போட்டியா என்றெல்லாம் பேசுகிறார்கள்.
நான் 100 சதவிகிதம் சொல்கிறேன். எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். அதற்கான வாய்ப்பு இல்லை. இதனை நான் ஏற்கனவே முதலமைச்சர் விஜயிடத்தில் தெளிவாக சொல்லிவிட்டேன்" என பேசியுள்ளார்.