ஜெயலலிதா சொன்னது நியாபகம் இல்லையா? எடப்பாடி பழனிசாமிக்கு திருமாவளவன் கேள்வி
ஜெயலலிதா சொன்னது நியாபகம் இல்லையா என எடப்பாடி பழனிசாமிக்கு திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பாஜக ஆட்சி
சென்னையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விசிக தலைவர் திருமாவளவன் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

இந்த கூட்டத்தில் பேசிய அவர், "நாங்கள் திமுக தலைமையிலான கூட்டணியை திமுக கூட்டணி என்கிறோம். நீங்கள் அதிமுக தலைமையிலான கூட்டணியை தேசிய ஜனநாயக கூட்டணி என்கிறீர்கள். உங்களால் அதை அதிமுக கூட்டணி என்று கூட சொல்ல முடியாதளவுக்கு பலவீனப்பட்டுள்ளீர்கள்.
நாளைக்கு அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அது பாஜக ஆட்சிக்கு வந்ததாக தான் பொருள். பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆர்எஸ்எஸ் ஆட்சிக்கு வந்தது என்றுதான் பொருள்.ஆர்எஸ்எஸ் ஆட்சிக்கு வந்தால் அது ஆரியர்கள் ஆட்சிக்கு வந்ததாக பொருள்.
ஆரியர்கள் ஆட்சிக்கு வந்தால் பெரியார் வீழ்த்த நினைத்த சனாதனம் மீண்டும் வந்துவிட்டது என்று பொருள். இதனால் தான் திமுகவுடன் உடும்புப்பிடியாக இருக்கிறேன். சில அற்பர்கள் ஆதாயத்திற்க்க திமுக கூட்டணியில் நாங்கள் இருப்பதாக பேசுகிறார்கள்.
ஜெயலலிதா சொன்னது நியாபகம் இல்லையா?
நான்கரை ஆண்டு திமுக ஆட்சியை விமர்சிக்கும் பிரதமர் மோடியைப் பார்த்து கேட்கிறேன், 11 ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்து கிழித்தீர்கள்? 1 சவரன் தங்கம் ஒன்னேகால் லட்சம் போனதற்கு, உலக சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்ததற்கு யார் பொறுப்பு?

அதானிக்கும் அம்பானிக்கும் இந்தியாவை விற்றுக் கொண்டிருக்கிறீர்கள். எல்லாவற்றையும் முதலாளித்துவ மையம் ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு புறம் கார்பரேட் மையம், மற்றொருபுறம் சனாதன மையம் இதுதான் பாஜக ஆட்சி.
முஸ்லீம் வெறுப்பு, சிறுபான்மை மக்களுக்கான அச்சுறுத்தல், பாபர் மசூதி இடிப்பு, திருப்பரங்குன்றத்தில் மதவாத அரசியல்... என்ன செய்து கிழித்துவிட்டீர்கள்?
மோடியின் அரசியல் ஆதாயத்திற்காக துணை போகிறார்எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் எடப்பாடி பழனிசாமியை மன்னிக்க மாட்டார்கள். அவர் எம்ஜிஆருக்கும் விசுவாசமாக இல்லை, ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இல்லை. தன் அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே செயல்படுகிறார்.
பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்று ஜெயலலிதா சொன்னாரா இல்லையா, அது எங்களுக்கு நியாபகம் உள்ளது, உங்களுக்கு நியாபகம் இல்லையா எடப்பாடி பழனிசாமி?
நான் ஒருமுறை பாஜக உடன் கூட்டணி வைத்து ஏமாந்து விட்டேன். இனி ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டேன் என ஜெயலலிதா அம்மையார் பேசினார். பிறகு எதற்காக பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைக்க வேண்டும்? " என கூறியுள்ளார்.