போர் அடித்த டெஸ்ட் மேட்ச்: கூலாக பாட்டு கேட்ட 3வது அம்பயர்
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டியின் போது 3வது நடுவர், பாடல் கேட்டுக்கொண்டிருந்த சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 4 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி ஜமைக்காவில் தொடங்கி நடைபெற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியும் பெற்றிருந்தது.
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்த போது அந்த அணி வீரர் பிராத் வெயிட் 77வது ஓவரில் 97 ரன்களில் ரன் அவுட்டானார். மிக முக்கியமான விக்கெட் என்பதால் கள நடுவர்கள் 3வது நடுவரின் முடிவுக்காக காத்திருந்தனர். ஆனால் அவரோ கூலாக இணையத்தில் பாட்டுக் கேட்டு கொண்டே விக்கெட் முடிவை சரியாக வழங்கினார்.
எப்போதும் 3வது நடுவரின் முடிவினை அறிவிப்பதற்காக மைதானத்தில் மிகப்பெரும் டிஜிட்டல் திரை ஒன்று ஏற்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் அதில் அவுட்டா, நாட் அவுட்டா என்பதை திரையிட்டு காட்டுவதற்கு பதிலாக தவறுதலாக தனது பாடல்களின் ப்ளே லிஸ்டை போட்டுவிட்டார் என்பதே இப்போட்டியில் வேடிக்கையாக அமைந்த சம்பவமாகும்.