தமிழகம் வந்தடைந்த மூன்றாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்
தமிழகத்தில் நிலவி வரும் ஆக்சிஜன் தட்டுப்பாடு சூழ்நிலையை தடுப்பதற்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு மேற்குவங்கம் தாராப்பூரில் இருந்து 80 டன் ஆக்சிஜன் ஏற்றி கொண்டு முதலாவது ரயில் சென்னை வந்தடைந்தது.
அதிகாலை 3 மணியளவில் வந்த ரயிலை அமைச்சர்கள் மா.சுப்ரமணியம், சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டு லாரிகள் மூலம் மாற்றி தேவை உள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
அதைப்போல நேற்று இரண்டாவது ரயில் ஜார்கண்ட் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து 40 டன் ஆக்சிஜனுடன் சென்னை வந்தடைந்தது. தமிழகத்தின் ஆக்சிஜன் பற்றாக்குறை மெல்ல குறைந்து வருகிற நிலையில் இன்று மூன்றாவது ரயில் ஒடிஸா மாநிலம் காலிங்கா நகரில் இருந்து 80 டன் ஆக்சிஜனுடன் சென்னை வந்தடைந்தது.
திருவொற்றியூர் கான்கார் நிறுவனத்தில் நான்கு கண்டெய்னர் பெட்டிகளில் வந்தடைந்த ஆக்சிஜன் ரயிலில் இருந்து லாரிகளுக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் வட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கொண்டு வரப்படும் ஆக்சிஜன் லாரிகள் மூலம் மாற்றப்பட்டு மருத்துவமனைகளில் தட்டுப்பாடுகள் நிலவும் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் ஓரிரு நாட்களில் 4 வது ரயில் தமிழகம் வரவுள்ளது