ஏடிஎம் இயந்திரத்தில் பேட்டரி திருடிய நபர் - போலீசாரை அதிரவைத்த வாக்குமூலம்
கோவை ஏடிஎம்களில் பேட்டரி திருட்டு போன சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை பகுதியில் இயங்கும் ஏடிஎம்களில் பேட்டரிகள் காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. சில நாட்களுக்கு முன் வெரைட்டிஹால் பகுதி ஏடி.எம்.ஒன்றில் பேட்டரிகள் காணாமல் போனதில் வெரைட்டி ஹால் போலீசார் விசாரணை நடத்திவந்த நிலையில் சிங்காநல்லூர் பகுதியிலும் பேட்டரி காணாமல் போனது.
உடனடியாக களத்தில் இறங்கிய காவல்துறையினர் தீவிர விசாரணை செய்த நிலையில் செந்தில் குமார் என்ற நபரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த நபர் அளித்த தகவல்கள் போலீசாரை அதிர வைத்துள்ளது.
அதாவது நாங்கள் முதலில் பேட்டரி மெக்கானிக் போன்று ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று பட்டப்பகலிலேயே பேட்டரிகளை திருடுவோம் என்றும், பேட்டரிகளை கழட்டும்போது வாடிக்கையாளர்கள் கேட்டால் நான் மெக்கானிக் என்றும் பேட்டரியை சரிசெய்ய வந்து இருப்பதாகவும் தெரிவித்து லாவகமாக பேட்டரியை திருடி பழைய இரும்பு கடையில் விற்று விடுவோம் எனவும் கூறியுள்ளார்.
மேலும் இரவு நேரங்களில் ஏ டி எம்களுக்கு சென்று பேட்டரி திருடினால் போலீஸ் வந்துவிடுவார்கள். அதனால் திருட்டு சம்பவத்தை பட்டப்பகலிலேயே செய்வோம். ஏனென்றால் ஏதாவது ஒரு பொருள் திருடப்பட்டால் திருடன் இரவில் தான் வருவான் என போலீசார் நினைப்பார்கள். அவர்களை ஏமாற்றவே நான் பட்டப்பகலில் மட்டுமே திருட செல்வேன் எனவும் செந்தில்குமார் கூற இதனைக் கேட்ட போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர்.