ஒத்த பைசா இல்ல; இத்தன சிசிடிவி கேமரா எதுக்கு - கடுப்பில் திருடன் கடிதம்!
திருடன் எழுதி வைத்த கடிதம் ஒன்று வைரலாகி வருகிறது.
திருட்டு சம்பவம்
நெல்லை, ஐஓபி காலனியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் பால்(57). இவர் அந்தப் பகுதியில் கிறிஸ்துவ ஊழியம் செய்து வருகிறார். அவரது மகள் மதுரையில் உள்ள தனியார் வங்கியொன்றில் பணியாற்றி வருகிறார்.

அதனால் ஜேம்ஸ் பால் அடிக்கடி மதுரைக்கு சென்று மனைவி மற்றும் மகளை சந்தித்து விட்டு வருவது வழக்கம். இந்நிலையில் வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா வேலை செய்யாததால் அருகில் இருந்த வீட்டில் உள்ளவருக்கு போன் செய்து வீட்டுக்குச் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
வைரல் கடிதம்
அதன்படி சென்று பார்த்ததில் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு கிடப்பதைப் பார்த்துள்ளார். உடனே தகவலின்படி விரைந்த போலீஸார் வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு கடிதம் சிக்கியது.

அதில், 'உன் வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை. இதுக்கு இத்தனை சிசிடிவி கேமரா. அடுத்த தடவை என்னை மாதிரி திருடன் வந்தால் ஏமாறாமல் இருக்க காசு வை.
மன்னித்துக் கொள்ளவும் - திருடன்' என எழுதப்பட்டிருந்தது. தொடர்ந்து அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.