சென்னையில் நியாயவிலைக் கடை பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் கொள்ளை... சிசிடிவி மூலம் பிடிபட்ட குற்றவாளி...
சென்னை சைதாப்பேட்டையில் நியாயவிலைக் கடை பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு ரூ.2 ஆயிரம் நிவாரணம் அறிவித்தது. இதனையடுத்து சென்னை சைதாப்பேட்டை எல்லைக்குட்பட்ட காவேரி நகர் 1வது தெருவில் அமைந்துள்ள நியாய விலைகடையில் கடந்த மே மாதம் 16 ஆம் தேதி இரவு பூட்டை உடைத்து பொதுமக்களுக்கு வழங்க வைத்திருந்த ரூ.7.36 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கடை மேலாளர் குணசேகரன் அளித்த புகாரின் அடிப்படையில் சைதாப்பேட்டை உதவி ஆய்வாளர் கண்ணன், தலைமை காவலர் புருஷோத்தமன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது. அதேசமயம் கொரோனா கால ஊரடங்கு காரணமாக சி.சி.டி.வி காட்சிகளைப் பெறுவதில் கடும் சிக்கல்களை காவல்துறையினர் எதிர்கொண்டனர்.
பெரும்பாலான பகுதிகளில் சி.சி.டி.வி பொருத்தப்பட்டு இருந்தாலும், ஊரடங்கு காரணமாக அதன் உரிமையாளர்களைத் தேடி செல்ல வேண்டிய இன்னலகளுக்கு மத்தியில் சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே சம்பவம் நடந்த அன்று அதிகாலை ஒருவர் 2 பைகளுடன் நடந்து செல்லும் தெளிவில்லாத ஒரு காட்சி சிக்கியது. அதனை பின்தொடர்ந்து கடற்கரை ரயில் நிலையம் வரையிலான சி.சி.டி.வி காட்சிகளை தனிப்படையினர் தொடர்ந்து ஆய்வு செய்தனர். அதில் அந்த நபர் சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் இறங்கி செல்வதைக் கண்டு பிடித்தனர்.
இதனை தொடர்ந்து நடந்த தொடர் விசாரணையின் பலனாக மாற்றுத் திறனாளி சின்ன காஞ்சிபுரம் வேங்கைவீதி தெருவை சேர்ந்த கோபி என்பவரை கைது செய்தனர். அவர் இதுபோன்ற திருட்டு செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருப்பதும், ஏற்கனவே 6 குற்றவழக்குகளில் தண்டனை பெற்றிருப்பதும் தனிப்படையினருக்கு தெரியவந்தது.
இதனையடுத்து அவரிடம் இருந்து திருடப்பட்ட பணத்தில் ரூ.4.45 லட்சம் பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.