இடைத்தரகர்கள் மூலம் என்னையும் 3 மாசம் மிரட்டுனாங்க - சபாநாயகர் அப்பாவு!!
அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இடைத்தரகர்கள் மூலம் தன்னை மிரட்டியதாக சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார்.
ED அதிகாரி கைது
திண்டுக்கல்லில் அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் பெற்றதாக மதுரை அமலாக்கத்துறை துறை அங்கித் திவாரி கைதாகி இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
அவர் மீது பதியப்பட்டுள்ள FIR'இல் இதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது என்றும், இது தவிர அங்கித் திவாரி, மருத்துவர் மற்றும் அவரது மனைவி ஆகியோரை மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளது பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
என்னையும் மிரட்டுனாங்க
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, இது சம்பவங்கள் தொடர்பாக பேசியுள்ளார். அவர் பேசும் போது சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் இடைத்தரகர்கள் மூலம் என்னை மிரட்டின என்ற திடுக்கிடும் தகவலை கூறினார்.
ஊரை விட்டு எல்லாம் போக சொன்னார்கள் என்றும் தன்னுடைய செல்போன் நம்பரை கூட மாற்ற சொன்னார்கள் என்றார்.
3 மாதமாக இடைத்தரகர்கள் பலர் தன்னிடம் பேசினார்கள் என தெரிவித்த அப்பாவு, தன்னைப்போன்று எல்லோருக்கும் மத்திய அரசின் புலனாய்வு நிறுவனங்கள் இடைத்தரகர்கள் மூலமாக மிரட்டல் விடுக்கின்றன என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பண பேரம் பேசி படியவில்லை என்றால் நோட்டீஸ் அனுப்பி அமலாக்கத்துறை எச்சரிக்கிறது என்ற சபாநாயகர் அப்பாவு, தான் சரியாக இருக்கிறேன் என்ன வந்தாலும் மேலே இருப்பவர் பார்த்துக்கொள்வார் என தெரிவித்துள்ளார்.