திராவிடத்தை நீக்க வேண்டுமா? கடைசி தொண்டன் உள்ளவரை..அது நடக்காது - உதயநிதி உறுதி!
கடைசி தொண்டன் உள்ளவரை திராவிடத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாது என உதயநிதி கூறியுள்ளார்.
உதயநிதி
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் முன்னாள் எம்எல்ஏ-வான ஆண்டி அம்பலம் இல்ல திருமண விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, “நான் இங்கு மணமக்களை வாழ்த்த மட்டும் வரவில்லை.
துணை முதல்வர் ஆனதற்கு உங்களிடம் வாழ்த்துப் பெறவும் வந்துள்ளேன். இது சுயமரியாதை திருமணம். பெரியார், அண்ணா, கருணாநிதி சொன்னதை நான் சொல்லி வருகிறேன். இவர்கள் மூவரும் பெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபட்டனர்.
அது நடக்காது..
இந்த வழியில் நமது முதல்வரும் பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைய பாடுபட்டு வருகிறார். இலவச பேருந்து பயணம் மூலம் இதுவரை 530 கோடி முறை பெண்கள் அரசுப் பேருந்தில் பயணித்துள்ளனர்.
மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது நமது திராவிட மாடல் அரசு. பெண்கள் முன்னேற்றத்துக்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அண்ணா சூட்டிய தமிழ்நாடு என்ற பெயரை ஒருவர் மாற்ற முயற்சித்தார். தமிழக மக்களின் எதிர்ப்பால் மன்னிப்புக் கேட்டார்.
இப்போது தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள திராவிடத்தை நீக்க வேண்டும் என சிலர் கிளம்பியுள்ளனர். திமுகவின் கடைசி தொண்டன் உள்ளவரை, தமிழனையும், தமிழ்நாட்டையும், திராவிடத்தையும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. இந்தி திணிப்பை ஒரு போதும் தமிழ்நாடு ஏற்காது. என்று தெரிவித்துள்ளார்.