சென்னை அணியுடனான தோல்விக்கு இவர்கள் தான் காரணம் - டூபிளசிஸ் வேதனை
சென்னை அணியுடனான தோல்விக்கு இவர்கள் தான் காரணம் என டூபிளசிஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை அணி ரன் குவிப்பு
16வது ஐபிஎல் தொடரின் 24வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டெவன் கான்வே 83 ரன்களும், சிவம் துபே 52 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு சென்னை அணி 226 ரன்கள் குவித்தது.
பதிலடி கொடுத்த பெங்களூர் அணி பெட்ஸ்மேன்கள்
இதன் பின்னர் 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூர் அணிக்கு அந்த அணியின் மிக முக்கிய வீரரான விராட் கோலி 6 ரன்னில் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தார்.
இதன் பின் கூட்டணி சேர்ந்த கிளன் மேக்ஸ்வெல் – டூபிளசிஸ் ஜோடி, சென்னை அணியின் பந்துவீச்சை சிதறடித்து அசுரவேகத்தில் ரன் குவித்தது.
பெங்களூர் அணி 8.2 ஓவர் முடிவில் 100 ரன்களை எடுத்தது. பின்னர் மேக்ஸ்வெல் மற்றும் டூபிளசிஸ் விக்கெட்டை பறிகொடுத்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்களை எடுத்த பெங்களூர் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த தோல்வி குறித்து பேசிய பெங்களூர் அணி கேப்டன் டூபிளசிஸ் பந்துவீச்சின் போது கடைசி நேரத்தில் கூடுதலாக ரன்கள் விட்டு கொடுத்ததாக தோல்விக்கான காரணமாக அமைந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.
கேப்டன் டூபிளசிஸ் வேதனை
இந்த போட்டியின் துவக்கத்தில் நான் அடித்த டைவ் ஒன்றில் எனது விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. காயத்தால் ஏற்பட்ட வலியால் எனக்கு அசெளகரியமாக இருந்தது.
நாங்கள் இந்த போட்டியில் சிறப்பாகவே பேட்டிங் செய்தோம் என நினைக்கிறேன். கடைசி நேரத்தில் எங்களால் எட்டக்கூடிய இலக்கே எஞ்சியிருந்தது,
எங்களது பினிசரான தினேஷ் கார்த்திக்கிற்கு அது மிக சுலபமான வேலை. ஆனாலும் சென்னை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளது அவர்களது பந்துவீச்சின் பலத்தை காட்டுகிறது.
பந்துவீச்சின் போது நாங்கள் சற்று கூடுதலாக ரன்கள் விட்டுகொடுத்துவிட்டோம். சென்னை அணியை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும், ஆனால் கடைசி சில ஓவர்களில் அதிகமான ரன்கள் வழங்கிவிட்டோம்.
சின்னசாமி ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கானது, இந்த ஆடுகளத்தில் பந்துவீச பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் திறமை தேவைப்படுகிறது.
முகமது சிராஜ் நம்ப முடியாத வகையில் மிக சிறப்பாக பந்துவீசினார். சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நாங்கள் இன்னும் கூடுதலாக ரன் குவித்திருக்க வேண்டும்.
இந்த போட்டியின் முடிவு எங்களுக்கு சாதகமாக அமையாவிட்டாலும், இதை கடந்து சென்று தான் ஆக வேண்டும்” என்று தெரிவித்தார்.