வரும் 29-ம் தேதி சனிப் பெயர்ச்சி இல்லை -திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் நிர்வாகம் அறிவிப்பு!
வரும் 29ம் தேதி சனிப் பெயர்ச்சி இல்லை என்று திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சனிப் பெயர்ச்சி
30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனிபகவான் விளங்கி வருகின்றார். சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று சனி பகவான் மீன ராசிக்கு செல்கிறார் என்று செய்திகள் முதல் சமூக வலைத்தளம் வரை தகவல் பரவியது. இது குறித்து ஜோதிடர்கள் ராசிப்பலன்கள் வழங்கி வந்தனர்.
இந்த நிலையில் வரும் 29ம் தேதி சனிப் பெயர்ச்சி இல்லை என்று திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து கோவில் நிர்வாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரும் 29ம் தேதி சனிப் பெயர்ச்சி இல்லை.
திருநள்ளாறு
'வாக்கிய பஞ்சாங்க' முறைப்படி 2026-ல் தான் சனிப் பெயர்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் வரும் 29-ம் தேதி தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெறும்.
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் வாக்கிய பஞ்சாங்கம் முறையை பின்பற்றுவதை தெளிவுபடுத்துகிறோம் .பாரம்பரிய வாக்கிய பஞ்சாங்க வழிபாட்டு மரபை பின்பற்ற பக்தர்கள், ஜோதிடர்கள், அர்ச்சகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.