ஒரு நாளைக்கு தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது - ரணில் விக்ரமசிங்கே கவலை..!

Ranil Wickremesinghe Sri Lanka
By Thahir May 16, 2022 04:58 PM GMT
Report

நாட்டின் பொருளாதாரம் குறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இலங்கையின் கடும் பொளாதார நெருங்கடி ஏற்பட்ட நிலையில் மக்கள் ஆளும் அரசுக்கு எதிராக போராட்டங்களை தொடர்ந்தன.

இதையடுத்து மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அந்நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுக் கொண்டார். நாட்டின் பொருளாதார நிலை குறித்து அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இதுகுறித்து அவர் பேசுகையில்,நான்கில் ஒரு பங்கு மின்சாரம் எண்ணெய் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், தினமும் 15 மணி நேரமாக மின்வெட்டு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இருப்பினும், இந்த நெருக்கடியைத் தவிர்க்க நாங்கள் ஏற்கனவே பணம் பெற்றுள்ளோம். நுகர்வோருக்கு எரிவாயுவை வழங்க 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை நாங்கள் உடனடியாகப் பெற வேண்டும்.

எரிவாயு மற்றும் மண்ணெண்ணை அவசர தேவையாக உள்ளது. இலங்கையில் உள்ள அனைத்து வங்கிகளிலும் டாலர் கையிருப்பில் தட்டுப்பாடு உள்ளது இந்திய கடன் உதவியின் கீழ் மே 19, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 2 டீசல் கப்பல்களும், மே 18, மே 29 ஆகிய தேதிகளில் 2 பெட்ரோல் கப்பல்களும் வரவுள்ளன.

நாங்கள் பல கடுமையான கவலைகளை எதிர்கொண்டுள்ளோம். இலங்கையின் பொருளாதார நிலையை சீர்செய்ய சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது.

தற்போது, ​​நமது கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது. தற்போது இலங்கையின் பொருளாதாரம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வரும் ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயமாக்க நான் முன்மொழிகிறேன்.

2022ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட அபிவிருத்தி வரவு செலவுத் திட்டத்திற்கு மாற்றாக புதிய வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க திட்டமிட்டுள்ளோம்.

அதனை சலுகை வரவு செலவுத் திட்டமாக முன்வைக்க உத்தேசித்துள்ளோம். நான் பொறுப்பேற்றது கத்தியின் மேல் நடப்பதைவிட பயங்கரமான சவால்.

மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது நடக்க வேண்டி உள்ளது. என்னிடம் கைப்பிடி இல்லை, என் கால்களில் கழற்ற முடியாத காலணிகளை அணிந்துள்ளேன்.

தற்போதைய பிரச்னைகளை தீர்க்க அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய சபை அல்லது அரசியல் கூட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவை அவசரமாக உள்ளது.

பிரதமர் பதவியை நான் கோரவில்லை. நாடு எதிர்கொண்டுவரும் சவாலான சூழலை பார்த்து அதிபர், இந்த பொறுப்பை ஏற்க அழைப்பு விடுத்தார். அடுத்த 2 மாதங்கள் நமக்கு கடுமையானதாக இருக்கும்” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறினார்.