தமிழகத்தில் மின் தடை பிரச்சனை எப்போது தீரும் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
தமிழகத்தில் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலை ஏற்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மின் தடை ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கியிருக்கும் நிலையில் திடீர் மின் தடையால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பாக மின்வாரியத்துக்கும் புகார்கள் குவிந்து வருகிறது.
இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 716மெகாவாட் மின்சாரம் கிடைக்காததே மின் தட்டுப்பாட்டிற்கு காரணம் என குற்றம் சாட்டினார்.
மேலும் நாள் ஒன்றுக்கு தமிழகத்தின் மின் உற்பத்திக்கு 72,000 டன் நிலக்கரி தேவை என்ற நிலையில் அதற்கு குறைவான நிலக்கரி மட்டுமே கிடைப்பதும் தேவைக்கேற்ப மின் உற்பத்தி செய்ய முடியாததற்கு காரணமாகும் என அவர் தெரிவித்தார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாடு தொடர்பாக அரைவேக்காட்டுத் தனமான கருத்துக்களை முன்வைப்பதாக விமர்சித்த செந்தில் பாலாஜி பாஜக ஆளும் மாநிலங்களில் தற்போது ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாடு குறித்து அண்ணாமலை விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அண்டை மாநிலங்களில் இருந்து கூடுதலாக 550 மெகாவாட் மின்சாரத்தை பெறுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் இரண்டொரு நாளில் தமிழகத்தில் மின் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலை ஏற்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்துள்ளார்.