அரசு பேருந்துகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெற தடை இல்லை - அமைச்சர் விளக்கம்
அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கு தடை இல்லை என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
2,000 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசா்வ் வங்கி கடந்த 19-ம் தேதி அறிவித்தது. தற்போது புழக்கத்தில் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை நாளை முதல் செப்டம்பா் 30-ம் தேதி வரை வங்கிக் கணக்கில் செலுத்தலாம் அல்லது வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ஆா்பிஐ அறிவித்தது.
இதையடுத்து, டாஸ்மாக் கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்கத்தடை என்று தகவல் பரவியது. இதனை அமைச்சர் செந்தில் பாலாஜி மறுத்தார்.
இந்தநிலையில், அரசுப் பேருந்துகளில் பயணிகளிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்கக்கூடாது என்றும் தகவல் பரவியது.
இதனிடையே, தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெற்று டிக்கெட் கொடுப்பதற்கு தடையில்லை என அனைத்து மண்டலங்களுக்கும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
நெல்லை மண்டலத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெறக்கூடாது என்று நேற்று அறிவுறுத்தப்பட்டிருந்ததை, திரும்ப பெற வேண்டும் என்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து சில்லறை கேட்டால் மட்டும் கொடுக்கக் கூடாது என்றும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து டிக்கெட் எடுப்பதற்கு அனைத்து பணிமனைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்றும் அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.