கூலிப்படையை வைத்து சொந்த மருமகனையே கொன்ற மாமியார் - தென்காசியில் பயங்கரம்

crime mother in law thenkasi mil kills son in law
By Swetha Subash Dec 18, 2021 02:02 PM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

தென்காசி மாவட்டம் கீழப்புலியூரை பூர்வீகமாக கொண்டவர் பொன்ராணி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் வசித்து வருகிறார்.

இவரது மகள் மாலா அதே பகுதியில் அழகு நிலையம் வைத்து தொழில் செய்து வருகிறார். விளாத்திக்குளம் பெருநாழி பகுதியை சேர்ந்த கார் டிரைவரான அரவிந்துக்கும் மாலாவிற்கும் காதல் மலர்ந்துள்ளது.

இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சார்ந்தவர்கள் என்றாலும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அரவிந்த் - மாலாவின் திருமணம் நடந்து 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில் மாலா குறித்தும் அவர் செய்யும் தொழில் குறித்தும் வெளியிடங்களில் பலர் அவதூறாக பேசுவதை கேள்விப்பட்ட அரவிந்த் தனது மனைவியிடம் அழகு நிலையம் வேண்டாம் எனது உழைப்பு மட்டுமே நமது குடும்பத்திற்கு போதும் என்று கூறியிருக்கிறார்.

இதனால் மாலாவிற்கும், அரவிந்த்திற்கும் இடையே அடிக்கடி குடும்பச் சண்டை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மாலா காதல் கணவன் மற்றும் விரும்பி செய்யும் அழகு நிலையத் தொழில் இரண்டையும் விட முடியாமல் போராடி வந்துள்ளார்.

இதை அறிந்த மாலாவின் தாயார் பொன்ராணி தனது மகளை அரவிந்திடம் இருந்து விவகாரத்து செய்து விடுமாறு கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாலா தனது தாயிடம் சண்டையிட்டு வீட்டுக்கு வந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் மருமகன் அரவிந்த் மீது ஆத்திரம் அடைந்த மாமியார் பொன்ராணி மருமகனை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.

இந்நிலையில் கடந்த 3-ம் தேதி தென்காசியில் டிரைவர் வேலைக்கு நண்பர்கள் கூப்பிட்டு இருப்பதாக தனது மனைவி மாலாவிடம் கூறிவிட்டு அரவிந்த் தென்காசி சென்றதாகக் கூறப்படுகிறது.

ஆனால் 4-ம் தேதி முதல் அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த மனைவி மாலா தென்காசி காவல் நிலையத்தில் தனது கணவர் அரவிந்த் காணாதது குறித்து புகார் செய்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அரவிந்தின் செல்போனுக்கு 3-ம் தேதி வரை தொடர்பு கொண்டவர்களின் பட்டியலை தயார் செய்து,

காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் கற்பகராஜ், மாதவன், தனிப்பிரிவு ஏட்டு முத்துராஜ் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் புலன் விசாரணையில் ஈடுபடத் தொடங்கினர்.

இதில் பல திடுக்கிடும் தகவல்கள் போலீசாரையே திக்குமுக்காட வைத்தது.

மாமியார் பொன்ராணி கூலிப்படையிடம் ரூ.10 லட்சம் பேசி அட்வான்ஸ் தொகை ரூ.5 லட்சம் கொடுத்து மருமகன் அரவிந்தை கொலை செய்து கல்கிடங்கில் வீசிச் சென்றது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து கீழப்புலியூரை சேர்ந்த பொன்னரசு என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரனையில் அரவிந்தை கொலை செய்து கீழப்புலியூருக்கும் பாட்டாகுறிச்சிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள கல்வெட்டான் குழியில் கல்லை கட்டி போட்டு சென்றதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறை ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் கற்பகராஜ் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பந்தப்பட்ட கல்குவாரியின் கல்வெட்டான் குழியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பைப்பர் படகு உதவியுடன் போராடி அரவிந்தின் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக பொன்னரசு கொடுத்த தகவலின்பேரில் அரவிந்தனின் மாமியார் பொன்ராணி, கீழபுலியூரை சேர்ந்த தம்பிரான், அருணாச்சலம் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் கொலையாளிகளான கீழப்புலியூரை சேர்ந்த சீத்தாராமன், வேட்டைக்காரன்குளம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் ஆகிய 2 பேரும் சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

கொலை நடந்து 5 வது நாளிலேயே கொலை குற்றவாளிகளை போலீசார் துரிதமாக துப்பு துலக்கி கைது செய்தனர்.