கணவனை தீர்த்துகட்ட எண்ணிய பெண், பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் : தேனியில் அதிர்ச்சி
தேனி மாவட்டம் கம்பம் குரங்குமாயன் தெருவை சேர்ந்தவர் 24 வயதான கவுதம் கேபிள் டி.வி. ஊழியரக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 21 வயது புவனேஸ்வரிக்கும் கடந்த மாதம் 10-ந்தேதி திருமணம் நடந்தது. இந்தநிலையில் கடந்த 8-ந்தேதி புவனேஸ்வரி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
அதன்படி, புவனேஸ்வரிக்கு, தொடக்கத்தில் இருந்தே கவுதமை பிடிக்கவில்லை, அவர் திருமணத்துக்கு முன்பு போலீஸ் தேர்வுக்கு பயிற்சி எடுத்து வந்துள்ளார்.
மேலும் வேலை பார்ப்பவரையே திருமணம் செய்து கொண்டு, தானும் வெளியில் சென்று வேலை செய்ய வேண்டும் என்று விரும்பியுள்ளார் புவனேஸ்வரி.
இதனால் அவருக்கு மண வாழ்க்கை ஏமாற்றமாக இருந்ததால் கவுதமை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார்.
புவனேஸ்வரி போலீஸ் தேர்வுக்கு பயிற்சி எடுத்த போது, கம்பம் அருகே உள்ள கோவிந்தன்பட்டியை சேர்ந்த 22 வயதான நிரஞ்சன் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார்.
இந்தநிலையில் புவனேஸ்வரி தனது நகையை வங்கியில் அடகு வைத்து ரூ.75 ஆயிரம் பணத்தை நிரஞ்சனிடம் கொடுத்து, தான் கணவரை வெளியில் அழைத்து வருவதாகவும், அங்கு அவரை காரை ஏற்றி கொன்று விடுமாறும் கூறியுள்ளார்.
இந்த திட்டத்தின்படி கடந்த 2-ந்தேதி புவனேஸ்வரி கணவரிடம் ஆசைவார்த்தை கூறி அவரை ஸ்கூட்டரில் வெளியில் அழைத்து வந்துள்ளார்.
கூடலூர் அருகே தொட்டிபாலத்தை நெறுங்கும்போது பின்னால் ஒரு கார் வேகமாக வந்து கவுதமின் ஸ்கூட்டர் மீது மோதியது.
இதில் காயமின்றி உயிர் தப்பிய கவுதமை காரில் இருந்து இறங்கிய 5 பேர் கீழே தள்ளி கால்களால் மிதித்து சரமாரியாக தாக்கிவிட்டு காரில் ஏறி தப்பி சென்றுள்ளனர்.
இதையடுத்து காரின் கேரள பதிவெண்ணை அடிப்படையாக வைத்து, கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் கவுதம் புகார் செய்திருந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதிய கார் மற்றும் 5 பேர் கும்பலை வலைவீசி தேடி வந்தனர்.
இது, புவனேஸ்வரிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கணவரை கொலை செய்ய தான் திட்டம் போட்டது போலீசுக்கு தெரிந்து விடுமோ என்று அச்சம் அடைந்த புவனேஸ்வரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.