இறந்த கருவை சுமந்த பெண்... தவறுதலாக போடப்பட்ட கொரோனா தடுப்பூசி
தேனியில் கர்ப்பிணி ஒருவருக்கு வயிற்றில் உள்ள குழந்தை இறந்தது தெரியாமல், கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த ஜெகன் - இருதய ரோஷினி தம்பதியினர் தற்போது போடிநாயக்கனூரில் வசித்து வருகின்றனர். திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் ரோஷினி தற்போது ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இதனிடையே நேற்று தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முதலாவது தவணையை ரோஷினி செலுத்திக் கொண்டுள்ளார்.
அதன்பின்னர், வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக தனியார் ஸ்கேன் சென்டருக்கு அவர் சென்றுள்ளார் . அங்கு அவருக்கு ஆறாவது மாதத்திற்கான ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. அப்போது குழந்தை எந்த ஒரு அசைவும் இல்லாமல் இருந்தது தெரியவந்துள்ளது. ஸ்கேன் சென்டரை சேர்ந்தவர்கள், குழந்தை உயிரிழந்து விட்டதாக ரோஷினியிடம் கூறியுள்ளனர்.
இதனால் பரிசோதனை முடிவுகளுடன் மீண்டும் டொம்புச்சேரி ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற ரோஷினியை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்திருப்பதை மீண்டும் உறுதிசெய்துள்ளனர். உடனே அவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர்.
அங்கு அடுத்தடுத்த செய்யப்பட்ட ஆய்வின்போது, ஒருவாரத்திற்கு முன்னரே வயிற்றில் குழந்தை உயிரிழந்திருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் தரப்பில் கூறும்போது, “குழந்தை இறப்பிற்கும், தடுப்பூசி செலுத்தியதற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. குழந்தை ஒரு வாரத்திற்கு முன்னரே தாயின் வயிற்றில் உயிரிழந்திருக்கிறது. அதைப்பற்றி அறியாமல் அவர் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வந்துள்ளார்.தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருவை வயிற்றிலிருந்து அகற்றி தாயை காப்பாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடுப்பூசி போடும் முன்பு தன் மனைவியை அரசு ஆய்வகத்தில் பரிசோதித்ததாகவும், அப்போது குழந்தை நலமுடன் இருப்பதாக சொன்ன பிறகே அவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் கணவர் ஜெகன் கூறியுள்ளார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.