மனைவி நடத்தையில் சந்தேகம் ..கொலை செய்யப்பட்ட கூலித் தொழிலாளி

murder theni
By Petchi Avudaiappan Mar 29, 2022 09:25 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தேனி அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் உடன் வேலைக்கு சென்று வரும் கூலித் தொழிலாளியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் புதிய நகராட்சி அலுவலகம் தெருவில் வசித்து வரும்  கூலித்தொழிலாளி மாரிச்செல்வம் என்பவரது மனைவி செல்லமணி  கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தோட்ட வேலைக்கு தினசரி சென்று வருகிறார். இதனிடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கேரளாவிற்கு வேலைக்கு சென்று வரும் தனது மனைவியின் நடத்தையில் மாரிச்செல்வம் சந்தேகமடைந்து அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். 

மேலும் இதற்கு காரணம் செல்லமணியுடன் வேலைக்கு சென்று வந்த கம்பம் சி.எம்.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த பவுன் மற்றும் அவரது கணவர் மகுடபதி என எண்ணிக்கொண்டு அவர்களிடமும் தகராறு செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கம்பம் நகராட்சி அலுவலகத் தெருவில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் பீடி வாங்கி விட்டு வீட்டிற்கு நடந்து சென்ற மகுடபதியிடம் மாரிச்செல்வம் தனது மனைவியின் நடத்தை குறித்து பேசி தகராறில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இதில்  தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மகுடபதியின் நெஞ்சில் சரமாரியாக குத்திவிட்டு மாரிச்செல்வம் அங்கிருந்து தப்பியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் இருந்த மகுடபதியை மீட்ட அக்கம் பக்கத்தினர், கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் மகுடபதி ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுதொடர்பாக மகுடபதியின் மனைவி பவுன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கம்பம் தெற்கு காவல்துறையினர் தலைமறைவாக இருந்த மாரிச்செல்வத்தை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.