11 உயிர்களை காவு வாங்கிய ஒரிஜினல் கொம்பன்- மர்மமான முறையில் உயிரிழப்பு
தேவாரம் பகுதியில் இதுவரை 11 நபர்களை கொன்ற காட்டு யானை மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள தேவாரம் மலை அடிவார பகுதிகளில் கடந்த இரண்டு வருடங்களாக ஒற்றை காட்டு யானையின் அட்டகாசம் படுமோசமாக இருந்து வந்துள்ளது.
இந்த காட்டுயானையால் இதுவரை 11 பேர் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அடுத்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், வனத்துறையினர் இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானையை பிடிக்க முயற்சி செய்தனர்.
ஆனால் எதற்கும் மசியாத அந்த காட்டுயானை ராஜாவாக சுத்தி வந்தது. இந்த நிலையில் இன்று காலை தேவாரம் அருகே உள்ள ஒரு விவசாய நிலத்தில் இந்த காட்டு யானை மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், யானையின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
யானையின் உடம்பில் எந்த காயமும் இல்லை, தாக்கப்பட்டதற்கான அடையாளமும் இல்லை என்பதால் யானை உயிரிழப்பிற்காக காரணத்தை வனத்துறையினரால் கண்டறியமுடியவில்லை.