மருத்துவமனையில் ரகளை - தட்டிக்கேட்ட முதியவருக்கு சரமாரி வெட்டு!
தேனி அரசு மருத்துவமனையில் அரிவாளுடன் ரகளை செய்த போதை ஆசாமிகளால் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டியில் அரசு ஆரம்பச் சுகாதார மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்கள் மாதாந்திர பரிசோதனை, வெளி நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அங்கு வந்த 2 போதை ஆசாமிகள் தகாத வார்த்தைகளால் பேசிய படி, கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனை கண்டு பொறுமை தாங்காத முதியவர் ஒருவர் ஏன் இப்படி சத்தம் போடுகிறீர்கள் என தட்டி கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமிகள், மறைத்து வைத்திருந்த அரிவாளால் முதியவரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனை தொடர்ந்து காயமடைந்த முதியவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், நோயாளிகள், செவிலியர்கள் என ஏராளமானோர்
கோரிக்கை விடுத்துள்ளனர். போதை ஆசாமிகள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.