வருமா சிறுத்தை? 10 நாட்களாக ஆட்டுக்குட்டியுடன் காத்திருக்கும் வனத்துறை!
தேனி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சிமலை அருகே உள்ள கைலாசபட்டியில் கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், சிவராத்திரி, அமாவாசை, பிரதோசம் போன்ற விஷேச நாட்களில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம்.
அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி கைலாசநாதர் கோயில் மலையிலிருந்து சிறுத்தை ஒன்று கீழிறங்கி வரும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இதனை கண்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், அப்பகுதியை ஆய்வு செய்து, விளை நிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகளை எச்சரிக்கை விடுத்தனர்.
இதனால் கோயிலுக்கு கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க, 3 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.
அதேபோல், சிறுத்தையைப் பிடிக்க ஜூன் 27ஆம் தேதி ஒரு கூண்டும், ஜூன் 29ஆம் தேதி மற்றொரு கூண்டும் ஆட்டுக்குட்டிகளுடன் வைக்கப்பட்டது.
இந்த கூண்டுகள்
வைக்கப்பட்டு 10 நாட்கள் கடந்த நிலையில், ஒரு இடங்களிலும் கூட சிறுத்தையின் நடமாட்டம் கேமராவில் தென்படவில்லை, கூண்டிலும் சிறுத்தை சிக்கவில்லை.
இதனை தொடர்ந்து, சிறுத்தை உண்மைக்கே இப்பகுதியில் இருக்கிறதா என வனத்துறையினர், மேலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.