பொழப்பு தேடி சென்னை வந்த இளைஞர் உயிரிழப்பு - நடுத்தெருவில் நிற்கும் குடும்பம்
சென்னையில் மாநகர பேருந்து மோதி வழிகாட்டி பெயர் பலகை தாங்கி நிற்கும் ராட்சத கம்பம் கீழே விழுந்த விபத்தில் இளைஞர் சண்முக சுந்தரம் உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழந்த இளைஞர்
கடந்த 7 ஆம் தேதி ஆலந்துார் மெட்ரோ ரயில் நிலையம் அருகே புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தைச் சேர்ந்தவர் சண்முக சுந்தரம்.
இவர் இருசக்கர வாகனத்தில் ஆலந்துார் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழிவாக வந்த மாநகர பேருந்து பெயர் பலகையை தாங்கி நின்று ராட்சத துாண் மீது மோதியது அப்போது துாண் சரிந்து கீழே விழுந்தது.
துாணின் அடிப்பகுதியில் சிக்கிய இளைஞர் சண்முக சுந்தரம் படுகாயம் அடைந்த நிலையில் ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சண்முக சுந்தரம் இறந்த நிலையில் அவரின் குடும்பம் நிற்கதியாக நிற்கிறது. உயிரிழந்த சண்முக சுந்தரத்திற்கு ராதிகா என்ற மனைவியும், 5 வயதில் மகள் ஒருவரும், 4 மாத ஆண் குழுந்தை ஒன்றும் உள்ளது.
எதிர்பார்த்து காத்திருந்த மனைவிக்கு மிஞ்சியது ஏமாற்றம்
சண்முக சுந்தரம் இரண்டு வருடங்களாக சென்னை சைதாப்பேட்டையில் தங்கி ஐஸ்கிரீம் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இவரது மாத வருமானம் குறைவு என்பதால் தனது குடும்பத்தை கூட அடிக்கடி பார்க்க செல்லாமல் இருந்து பணிபுரிந்து வந்துள்ளார்.
இதனிடையே கடந்த முறை தன் குடும்பத்தினரை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவரது மனைவி மகனுக்கு குலதெய்வ கோவிலுக்கு சென்று மொட்டை அடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து சென்னை திரும்பிய சண்முக சுந்தரம் வெள்ளிக்கிழமை மொட்டை அடிக்க குல தெய்வ கோவிலுக்கு போகலாம் என கூறியுள்ளார்.
கணவரின் வருகை எதிர்பார்த்து கொண்டிருந்த அவரது மனைவிக்கு கடைசியில் காத்திருந்தது அவர் உயிரிழந்தார் என்ற அதிர்ச்சி செய்தி.
வேலை கிடைக்க உதவிடுங்கள்
தற்போது ராதிகா தனது கணவர் சண்முக சுந்தரத்தின் சிறிய கூரை வீட்டில் மாமனார், மாமியாருடன் தன் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
கணவர் உயிரிழந்த நிலையில் வாழ்வாதரத்திற்கு வழியின்றி தவித்து வருகின்றனர். சண்முக சுந்தரத்தின் தாய் தன் மகன் தான் குடும்பத்தை பார்த்து வந்தான். அவன் இல்லாமல் நாங்கள் எப்படி பொழைக்க போறோம் என்று தெரியல என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
தனது 5 வயது பெண் குழந்தை மற்றும் 4 மாத கை குழந்தையை வைத்துக் கொண்டு பரிதவிக்கும் ராதிகாவிற்கு தனியார் நிறுவனங்களோ அல்லது அரசு வேலை வாய்ப்பு வழங்கி உதவிட வேண்டும் என அப்பகுதி வாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.