ஒரு தலைக்காதல்; பெண்ணை வீடு புகுந்து கத்தியால் குத்திய இளைஞர்

Tamil nadu Tamil Nadu Police
By Thahir Oct 24, 2022 08:04 AM GMT
Report

தேனியில் காதலிக்க மறுத்த பெண்ணை இளைஞர் ஒருவர் வீடு புகுந்தால் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவர், அதே பகுதியில் உள்ள 25 வயது பெண்ணை ஒரு தலையாக காதலித்துவந்துள்ளார்.

அந்தப் பெண் ஒரு கல்லூரியில் பணிபுரிவதாக சொல்லப்படுகிறது. முத்துராஜ், அந்தப் பெண்ணை காதலிக்க சொல்லி தொடர்ந்து வற்புறுத்திவந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று அந்தப் பெண் வீட்டிற்கு சென்ற முத்துராஜ், பெண்ணின் தாய் தந்தை முன்பாக அவரை கத்தியால் குத்தியுள்ளார்.

The young man stabbed the woman

இதில், அந்தப் பெண்ணுக்கு கை, கழுத்து மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது அப்பெண்ணின் தாய், தந்தை கூச்சலிட்டதில் அக்கம் பக்கத்தினர் திரண்டுவந்து முத்துராஜை பிடித்தனர்.

அதன் பின் பெரியகுளம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அங்கு வந்த பெரியகுளம் காவல்துறையினர், முத்துராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும், காயமடைந்த பெண்ணை மீட்ட காவல்துறையினர் பெரியகுளம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பிறகு காயம் பலமாக இருப்பதால், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.