திருமணமான 22வது நாளில் கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த புதுப்பெண் - கம்பத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
கம்பத்தில் திருமணமான புதுப்பெண் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் குரங்குமாயன் தெருவை சேர்ந்த கேபிள் டி.வி. ஊழியரான கவுதம் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த புவனேஸ்வரிக்கும் கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்தநிலையில் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி புவனேஸ்வரி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் திருமணமான ஒரு மாதத்துக்குள் புதுப்பெண் தற்கொலை செய்ததால் அவரது மரணம் குறித்து ஆர்.டி.ஓ.(பொறுப்பு) சாந்தியும் விசாரணை நடத்தினார்.
இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது தற்கொலை செய்துக் கொண்ட புவனேஸ்வரிக்கு தொடக்கம் முதலே கவுதமை பிடிக்கவில்லை. அவர் திருமணத்துக்கு முன்பு போலீஸ் தேர்வுக்கு பயிற்சி எடுத்த்தாகவும், மேலும் வேலை பார்ப்பவரையே திருமணம் செய்து கொண்டு தானும் வெளியில் சென்று வேலை செய்ய வேண்டும் என்று விரும்பியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அவருக்கு திடீரென ஏற்பட்ட மண வாழ்க்கை ஏமாற்றமாக இருந்துள்ளது. எனவே அவர் கவுதமை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக புவனேஸ்வரி போலீஸ் தேர்வுக்கு பயிற்சி எடுத்த போது நட்பாக பழகிய கம்பம் அருகே உள்ள கோவிந்தன்பட்டியை சேர்ந்த நிரஞ்சனிடம் தனது நகையை வங்கியில் அடகு வைத்து ரூ.75 ஆயிரம் கொடுத்துள்ளார்.
திட்டமிட்டபடி தான் கணவரை வெளியில் அழைத்து வருவதாகவும், அங்கு அவரை காரை ஏற்றி கொன்று விடுமாறும் கூறினார். அதன்படி திருமணமான 22வது நாளில் அதாவது கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி புவனேஸ்வரி கணவரிடம் ஆசைவார்த்தை கூறி அவரை ஸ்கூட்டரில் வெளியில் அழைத்து வந்தார்.
கூடலூர் அருகே தம்மணம்பட்டி பகுதியில் உள்ள தொட்டிபாலத்தை அவர்கள் பார்த்துவிட்டு திரும்ப வந்து கொண்டு இருந்தனர். அப்போது ஸ்கூட்டர் பழுதான நிலையில் கவுதம் ஸ்கூட்டரை தள்ளிக்கொண்டு நடந்து வந்தார். அப்போது பின்னால் ஒரு கார் வேகமாக வந்து கவுதமின் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் காயமின்றி அவர் உயிர் தப்பினார்.
காரில் இருந்து இறங்கிய 5 பேர் கவுதமை கீழே தள்ளி கால்களால் மிதித்து சரமாரியாக தாக்கி காரில் ஏறி தப்பி சென்று விட்டனர். இதையடுத்து காரின் கேரள பதிவெண்ணை அடிப்படையாக வைத்து கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் கவுதம் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மோதிய கார் மற்றும் 5 பேர் கும்பலை தேடி வந்தனர்.
இதனால் கணவரை கொலை செய்ய தான் திட்டம் போட்டது போலீசுக்கு தெரிந்துவிடும் என நினைத்த புவனேஸ்வரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே கவுதம் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்றவர்கள் குறித்து போலீசுக்கு தகவல் கிடைத்தது. புவனேஸ்வரிக்கு ஏற்கனவே பழக்கமான நிரஞ்சன், அவரது நண்பர்களான கோவிந்தன்பட்டியை சேர்ந்த மனோஜ் , சத்யா, பிரதீப் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
இதில் தான் இத்தகைய தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.