ஒடுக்கப்பட்டோரின் குரல் காணாமல் போகிறது- எழுத்தாளர் சுகிர்தராணி

writer sukirtarani
By Irumporai Aug 26, 2021 07:41 AM GMT
Report

பட்டியலினத்தவர்களின் படைப்புகள் தொடர்ந்து நீக்கப்பட்டு வருவதால் எனது படைப்பு நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்ச்சியாக இல்லை எனத் எழுத்தாளர் சுகிர்தராணி தெரிவித்துள்ளார்.

டெல்லி பல்கலைக்கழக ஆங்கிலப் பாடப்புத்தகத்திலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டியலின பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டுள்ளது கல்விக்குழுவைச் சேர்ந்த 15 பேர் எதிர்ப்பு தெரிவித்தும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி பல்கலைக் கழகம் ஆங்கில இலக்கிய பாடத் திட்டத்திலிருந்து எழுத்தாளர் மாகாஸ்வேதாதேவியின் திரௌபதை' , எழுத்தாளர் பாமாவின் சங்கதி சுகிர்தராணியின் கைம்மாறு மற்றும் என்னுடல் ஆகிய படைப்புகள் நீக்கப்பட்டிருக்கின்றன.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த பின்னரும் பல்கலைக்கழக மேற்பார்வைக் குழுவின் இந்த நடவடிக்கை மிகுந்த ஆச்சரியம் அளிப்பதாக தெரிவித்துள்ள பேராசிரியர்கள், இக்குழுவில் ஆங்கிலத்துறையைச் சேர்ந்த யாரும் உறுப்பினர்களாக இல்லாதது குறித்தும் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர்.

மேலும், படைப்புகளின் நீக்கத்திற்குப் பின்னணியில் அரசியல் காரணங்கள் உள்ளன என கல்விக்குழு உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதுகுறித்து எழுத்தாளர் சுகிர்தராணி கூறுகையில், நீக்கப்பட்ட தகவலே செய்திகள் வாயிலாகத்தான் எனக்குத் தெரியவந்தது.

பல்கலைக்கழகத்திலிருந்து யாரும் எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது எனக்கு அதிர்ச்சியை தரவில்லை. ஏனெனில் அது தொடர்ந்து நடப்பதுதான். மகாஸ்வேதா தேவியின் படைப்புகள் பழங்குடி மக்களின் வாழ்வியலை சொல்லும் படைப்புகளாக இருந்தன.

அதுவும் நீக்கப்பட்டுள்ளது. நானும் எழுத்தளார் பாமாவும் எழுதிய படைப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை எடுத்துரைக்கும் படைப்புகளாக, பட்டியலின பெண்கள் மீதான வன்முறைகளை பேசும் படைப்புகளாக இருந்தன. அவையும் நீக்கப்பட்டுள்ளன.

ஒடுக்கப்பட்டவர்களுக்கான குரல் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் குரலை காணாமல் ஆக்குவதை ஏற்றுக் கொள்ள இயலாது. எனவும் இதற்குப் பின்னணியில் சாதியப் பின்புலம், இந்துத்துவ பின்புலம் இருப்பதாகவேகருதுவதாக சுகிர்தராணி தெரிவித்துள்ளார்.