திருடிய பணத்தை மீண்டும் உண்டியலில் போட்டு மன்னிப்பு கடிதம் எழுதிய திருடன் - மக்கள் ஆச்சரியம்

By Nandhini Jun 24, 2022 10:48 AM GMT
Report

கோவில் உண்டியலிலிருந்து ரூ10,000த்தை திருடிய திருடன் ஒருவர், சாமியிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதி பணத்தை வைத்து விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருடு போன பணம்

ராணிப்பேட்டை மாவட்டம், லாலாப்பேட்டை அருகே புகழ்பெற்ற காஞ்சனகிரிமலையில் ஈஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி விழா சிறப்பாக நடந்தது. திடீரென இக்கோவிலில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போனது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் சிப்காட் போலீசில் புகார் கொடுத்தது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

திருடிய பணத்தை மீண்டும் உண்டியலில் போட்டு மன்னிப்பு கடிதம் எழுதிய திருடன் -  மக்கள் ஆச்சரியம் | The Thief Who Stole The Money

கடிதம் எழுதி வைத்த திருடன்

இந்நிலையில், நேற்று கோவில் நிர்வாகத்தினர் 1008 சுயம்பு லிங்கங்கள் முன்பு வைத்திருந்த உண்டியலை திறந்து அதிலிருந்த பணத்தை எடுத்தனர். அப்போது உண்டியலில் பக்தர்கள் செலுத்திய பணத்துடன், ஒரு கடிதமும், அதனுள் 10 ஆயிரம் பணமும் இருந்தது. அந்தக் கடிதத்தை அவர்கள் பிரித்துப் பார்த்தனர்.

அதில், என்னை மன்னித்து விடுங்கள். நான் சித்ரா பௌர்ணமி கழித்து கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி விட்டேன். அப்போதிலிருந்து எனக்கு மனசு சரியில்லை. நிம்மதியில்லை. அப்புறம் வீட்டில் நிறைய பிரச்சினை வருகிறது.

எனவே நான் மனம் திருந்தி எடுத்த பணத்தை அதே உண்டியலில் போட்டு விடுகிறேன். எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். கடவுளும் என்னை மன்னிப்பாரா என்று தெரியாது வணக்கம் என்று எழுதியிருந்தது.

மக்கள் ஆச்சரியம்

இதனால், அதிர்ச்சி அடைந்த கோயில் நிர்வாகத்தினர் இந்த கடிதத்தை சிப்காட் போலீசில் ஒப்படைத்தனர். கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் மனம் திருந்தி மீண்டும் பணத்தை உண்டியலில் மன்னிப்பு கடிதத்துடன் செலுத்தியது அப்பகுதியில் பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.