நாளை தாக்கல் ஆகிறது தமிழக பட்ஜெட் - இல்லத் தரசிகளுக்கு ரூ.1000 வழங்க வாய்ப்பு?
தமிழக பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன். திமுக ஆட்சிக்கு வந்த பின் தாக்கல் செய்யப்படும் முதல் முழு பட்ஜெட் இது.
தேர்தல் சமயத்தில் பல வாக்குறுதிகளை அறிவித்திருந்தது திமுக. ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வாக்குறுதிகளை எல்லாம் இன்னும் நிறைவேற்றாமல் உள்ளதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து அதனை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பி வருகின்றன.
இதுபோன்ற ஒரு இக்கட்டான சூழலில் தான் தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. அதோடு அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வரும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
ராஜஸ்தான், சதீஷ்கர் மாநில அரசுகள் ஏற்கனவே பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசும் இதை பின்பற்றி அறிவிப்பை வெளியிடுமா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
திமுக சட்டமன்றத் தேர்தலில் மட்டுமல்லாமல் ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என அனைத்திலும் இமாலய வெற்றி பெற்றது.
இதனால் இந்த பட்ஜெட்டில் மக்களின் நம்பிக்கையை பெற வேண்டிய சூழலில் ஆளும் கட்சி உள்ளது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து எதிர்கட்சிகளையும், மத்திய பட்ஜெட்டையும் விமர்சித்த நிலையில், இவர் தாக்கல் செய்யும் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
இந்த நிலையில் திமுக தேர்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என்று கூறப்படுகிறது.இந்த அறிவிப்பை எதிர்நோக்கி இல்லத் தரசிகள் காத்துக்கிடக்கின்றனர்.