நாடாளுமன்ற கட்டடத்தில் செங்கோல் வைப்பதை வரவேற்கிறேன் : ஓபிஎஸ் அறிக்கை

O Paneer Selvam ADMK
By Irumporai May 27, 2023 10:09 AM GMT
Report

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் செங்கோல் வைப்பதை வரவேற்பதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற திறப்பு

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவினை முன்னிட்டு ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் : செங்கோல் என்பது நேர்கோல் ஆகும். செங்கோல் என்பது அரசு சின்னங்களுள் ஒன்றாக போற்றப்பட்டது. ஒரு மன்னனுக்கு மகுடமும், அரியணையும் எப்படி முக்கியமோ, அதுபோல் செங்கோலும் இன்றியமையாதது.

தமிழகத்தில் மன்னர் ஆட்சிக் காலம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, புதிய மன்னரின் கரங்களில் செங்கோலை அளித்து ராஜகுரு ஆசிர்வதிப்பது மரபு. நீதிநெறி வழுவாமல் ஆட்சி நடைபெற வேண்டும் என்பதற்கான அடையாளம்தான் இந்த செங்கோல்.

நாடாளுமன்ற கட்டடத்தில் செங்கோல் வைப்பதை வரவேற்கிறேன் : ஓபிஎஸ் அறிக்கை | The Scepter In The New Parliament Building

ஓர் ஆட்சி எப்படி நீதி நெறி தவறாமல் நடக்க வேண்டும் என்பதை செங்கோன்மை என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஓபிஎஸ் அறிக்கை

இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த செங்கோல், இந்திய நாடு சுதந்திரம் பெற்றபோது, ஆட்சி மாற்றத்தினை அடையாளப்படுத்தும் வகையில், பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலாக இருந்த லார்டு மவுண்ட்பேட்டன் பண்டித ஜவஹர்லால் நேருவிடம் வழங்கினார் என்பதும், இதற்கு வழிகாட்டியாக இருந்தவர் மூதறிஞர் ராஜாஜி என்பதும், இந்தச் செங்கோலை இந்தியாவின் பாரம்பரிய சைவ மடங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீன மடத்தின் குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிகர் மேற்கொண்டார் என்பதும், இதனை சென்னை, உம்மிடி பங்காரு அணிகலன் நிறுவனம் வடிவமைத்தது என்பதும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் பெருமை சேர்க்கக்கூடிய ஒன்றாகும்.

புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழா சீரோடும், சிறப்போடும் நடைபெற எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு புதிய நாடாளுமன்ற கட்டடத்தை உருவாக்கி, தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அதில் செங்கோலை இடம் பெறச் செய்த பிரதமருக்கு என்னுடைய பாராட்டினையும், நன்றியினையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.