ஐயப்பன் மீது ஈர்ப்பு; பாதிரியார் சபரிமலையில் சாமி தரிசனம் - கிறிஸ்தவ சபை நடவடிக்கை !

Kerala India Sabarimala
By Jiyath Sep 22, 2023 04:17 AM GMT
Report

கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

பாதிரியார் 

கேரள மாநிலம் திருவனந்தபுரம் உச்சக்கடை பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் (50). இவர் ஆங்கிலிக்கன் சபை பாதிரியாராக உள்ளார். இவருக்கு சபரிமலை ஐயப்பன் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலை கோவிலுக்கு செல்ல தீர்மானித்தார்.

ஐயப்பன் மீது ஈர்ப்பு; பாதிரியார் சபரிமலையில் சாமி தரிசனம் - கிறிஸ்தவ சபை நடவடிக்கை ! | The Priest Manoj Who Visited Swami At Sabarimala

அதன்படி கடந்த மாதம் மாலை அணிந்து விரதததை தொடங்கினார். இதனையடுத்து மனோஜ் 41 நாள் விரதத்தை முடித்து, திருவனந்தபுரம் திருமலையில் உள்ள மகாதேவர் கோவிலில் இருமுடி கட்டி நேற்று முன்தினம் சபரிமலைக்கு புறப்பட்டார். செல்லும் வழியில் சிவகிரி, பந்தளம், எருமேலியில் அவர் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் மனோஜ் 18ம் படி ஏறி வழியாக சன்னிதானத்துக்கு சென்று மனம் உருக வேண்டி அய்யப்பனை தரிசனம் செய்தார். அங்கு பாதிரியார் மனோஜுக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சபரிமலையில் தரிசனம்

மேலும், சபரிமலை கோவில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி, மாளிகைப்புரம் கோவில் மேல்சாந்தி ஹரிஹரன் நம்பூதிரி ஆகியோர் அவருக்கு பொன்னாடை அணிவித்தனர்.

ஐயப்பன் மீது ஈர்ப்பு; பாதிரியார் சபரிமலையில் சாமி தரிசனம் - கிறிஸ்தவ சபை நடவடிக்கை ! | The Priest Manoj Who Visited Swami At Sabarimala

இந்நிலையில் தரிசனம் செய்தது பற்றி பாதிரியார் மனோஜ் கூறியதாவது "இந்து மதம் குறித்து ஆழமாக தெரிந்து கொள்வது மட்டும் தான் எனது நோக்கம், மதம் மாறும் எண்ணம் இல்லை. இந்து மதம் மட்டுமல்லாமல் பிற மதங்கள் குறித்தும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். சபரிமலை பயணம் மனதுக்கு மிகவும் இனிமை தந்தது. அங்கிருந்து வரமுடியாத அளவுக்கு பூரிப்பை தந்தது" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மனோஜ் மீது ஆங்கிலிக்கன் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆலயங்களில் திருப்பலி உள்பட சடங்குகள் நடத்த அவருக்கு தடை விதித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் அவருக்கு வழங்கப்பட்டிருந்த அடையாள அட்டையும் திரும்ப பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.