தம்பதி கடத்தல்...நள்ளிரவில் கடத்தல் காரர்களை காரில் விரட்டிய போலீசார் - ஒருவர் கைது

Tamil Nadu Police
By Thahir Jan 24, 2023 10:03 AM GMT
Report

தம்பதியை கடத்தி பணம் பறிக்க முயன்ற கடத்தல்காரர்களை போலீசார் நள்ளிரவில் விரட்டிச் சென்ற போது ஒருவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

காரை வழிமறித்து தம்பதி கடத்தல் 

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த ஆபீசர் டவுன் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் வயது(55). இவரின் மனைவி சந்திரா வயது(43).

நிலத்தரகர்களான இவர்கள் இருவரும் நேற்று சென்னை பொன்னேரி பகுதியில் நிலம் வாங்குவதற்காக அவர்களது காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது திருச்சி அருகே அடையாளம் தெரியாத நபர்கள் இவர்களது காரை வழிமறித்து இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பின் அவர்கள் இருவரையும் அவர்களது காரிலேயே ஏற்றிக்கொண்ட அந்த நபர்கள், இடம் வாங்க நீங்கள் எடுத்து செல்லும் பணத்தை எங்களிடம் கொடுங்கள் என்று மிரட்டி உள்ளார்கள். ஆனால் தம்பதியினர் தங்களிடம் எந்த பணமும் இல்லை என்று கூறி இருக்கின்றனர்.

கடத்தல்காரர்களை துரத்திய போலீசார்

இதற்கு பிறகு அவர்களது மகன் கலைசெல்வனிடம் கூறி பணத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு மிரட்டி உள்ளனர். பின் தங்கள் மகன் கலைசெல்வனிடம் நடந்ததை கூறி பணத்தை ஏற்பாடு செய்யுமாறு தம்பதியினர் மொபைல் வழியாக கூறியுள்ளனர்.

தம்பதி கடத்தல்...நள்ளிரவில் கடத்தல் காரர்களை காரில் விரட்டிய போலீசார் - ஒருவர் கைது | The Police Chased Away The Kidnappers In A Car

இந்நிலையில், கலைசெல்வன் பணத்தை மணப்பாறையில் வந்து வாங்கி கொள்ளுமாறு கூறியுள்ளார். பின்னர் தாமதிக்காமல் தனது தாய், தந்தை கடத்தப்பட்ட சம்பவம் குறித்து மணப்பாறை காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.

ஆகவே, உடனடியாக மணப்பாறை காவல் ஆய்வாளர் கோபி தலைமையிலான காவலர்கள் கடத்தல் கும்பலை பிடிக்க ஆண்டவர் கோயில் அருகில் காத்திருந்தனர்.

பணத்தை வாங்க வந்த கடத்தல்காரர்கள் காவலர்களை பார்த்தவுடன் வாகனத்தை வேற பாதையில் திருப்பி தப்பி சென்றனர்.

போலீஸாரும் தொடர்ந்து விரட்டி சென்றனர். இதை தொடர்ந்து, கடத்தல்காரர்கள் நிலத்தரகருக்கு சொந்தமான சொகுசு காரை வையம்பட்டி அருகே நிறுத்திவிட்டு வேறு ஒரு வாகனத்தில் பழனியப்பன், சந்திரா இருவரையும் ஏற்றி கொண்டு தப்பி சென்றார்கள். அவர்களிடம் இருந்த 10சவரன் நகை, 40ஆயிரம் பணம் ஆகியவற்றுடன் காரில் இருந்து திண்டுக்கல் அருகே அவர்களை இறக்கிவிட்டு பின் தப்பி சென்றுவிட்டனர்.

ஒருவர் மடக்கிப்பிடித்து கைது செய்த போலீஸ் 

தம்பதியர் இருவரும் அங்கிருந்து நேற்று இரவு மணப்பாறை காவல் நிலையம் வந்தனர். நடந்த விவரங்களை போலீஸாரிடம் தெரிவித்தனர்.

இதனிடையே கலைசெல்வத்திடம் பணம் வாங்குவதற்காக தோகைமலை அருகே காத்திருந்த துவாக்குடியை சேர்ந்த காளிதாஸ் வயது(53) என்பவரை போலீஸார் மடக்கி பிடித்தனர்.

பின், காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த சம்பவத்தில் தப்பித்தவர்கள் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, காரைக்குடி, ஆறாவயல் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும், பிடிபட்ட காளிதாசிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.