ஆதீனத்தைத் தொட்டவன் அன்றே தொலைந்தான் - அண்ணாமலை எச்சரிக்கை!
ஆதீனத்தைத் தொட்டவன் அன்றே தொலைந்தான் என ஓசூரில் நடைபெற்ற 8 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
ஓசூர் அடுத்த சூளகிரியில் பாஜகவின் 8 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், கலந்துகொண்டு பேசிய மாநில தலைவர் அண்ணாமலை,

1947-ல் இருந்து எந்த அரசும் செய்யாத நிர்வாக மாற்றங்களைக் கடந்த 8 ஆண்டுகளில் பாஜக செய்துள்ளதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், 8 ஆண்டுகள் முடிந்தும் கூட பாஜக ஆட்சியின் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டைக் கூடச் சொல்ல முடியாது எனக் கூறினார்.
அணில் வந்ததால் மின்சாரம் போனது
டாடா நிறுவனத்தின் செல்போன் தயாரிக்கும் நிறுவனம் கிருஷ்ணகிரி வருகிறது எனத் தெரிவித்த அவர், இதன் மூலம் 19,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவித்தார்.
மேலும், 8 ஆண்டுகளில் 99.50% வீடுகளில் கேஸ் இணைப்பு உள்ளது எனக் குறிப்பிட்ட அவர், பெண்களை மையப்படுத்திப் பல திட்டங்களைப் பிரதமர் மோடி கொண்டு வருகிறார் எனக் கூறினார்.
இந்தியா முழுவதும், இதுவரை 12 கோடிக்கு மேல் வீடு கட்டிக் கொடுத்து உள்ளதாகத் தெரிவித்த அண்ணாமலை, பெண்களின் பெயரில் 68 சதவீதத்திற்கும் மேல் பட்டா உள்ளதும் எனக் குறிப்பிட்டார்.
ஆன்லைன் பணப் பரிவர்த்தனையில் உலகில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது எனவும், 45கோடி வங்கிக் கணக்குகளில் மோடி அரசு நேரடியாக 22 லட்சம் கோடி ரூபாய் பணத்தைச் செலுத்தி உள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும், 2014-க்கு முன்பு இந்தியப் பொருட்களை வாங்க வேண்டாம், அவை தரம் குறைவாக இருக்கும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், தற்போது அப்படி இல்லை எனத் தெரிவித்த அவர்,
உலகம் முழுவதும் இருக்கும் இரு சக்கர வாகனத்தில் 15% கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்பட்டதாக இருப்பதாகவும், அதுதான் சுயச் சார்பு இயக்கம் எனக் கூறினார்.
8 ஆண்டுக்கால பாஜக ஆட்சியில் மக்களுக்குச் சலிப்பு தட்டவில்லை எனக் கூறிய அவர், தமிழ்நாட்டில் 1 ஆண்டு ஆட்சியில் எப்பொழுது தேர்தல் வரும் என்ற எண்ணம் வந்துள்ளதாக விமர்சித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் லஞ்சம் லாவண்யம் இல்லாத தினம் உண்டா எனக் கேள்வி எழுப்பிய அவர், கண்ணுக்குத் தெரியாதவற்றில் ஊழல் செய்வதாகக் குற்றச்சாட்டு தெரிவித்தார். 200 ஆண்டுகளாக மின்சாரம் உள்ளது.
ஆனால், உலகில் ஒரு தலைவர் கூட அணில் வந்ததால் மின்சாரம் போனது எனக் கூறியது இல்லை என விமர்சனம் செய்த அவர், மின்சாரத்தால் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டது அணில் தான் எனவும்,
தமிழ்நாட்டில் முதலமைச்சரைத் தவறாகப் பேசுபவரை ஓடிப் போய் பிடிக்கவே காவலர்களுக்கு ஓட்டப் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாகச் சாடினார். தொடர்ந்து பேசிய அவர், வடபழனி முருகன் கோவிலில் 5.5 ஏக்கர் நிலத்தை மீட்டதாக அமைச்சர் சேகர்பாபு கூறுகிறார்.
ஆனால், 16 ஆண்டுகளுக்கு முன்பு திமுக தான் அந்த நிலத்தைக் குத்தகைக்கு விட்டது என்பதை ஏன் சொல்ல மறுக்கின்றனர் எனக் கேள்வி எழுப்பிய அவர்,
ஆதீனத்தைத் தொட்டவன் அன்றே தொலைந்தான் என எச்சரித்தார்.