மனிதர்களோட அடுத்த வாழ்க்கை நிலவுலதான் : இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

ISRO scientist myilsamiannadurai
By Irumporai Apr 14, 2022 03:13 AM GMT
Report

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனரும், தமிழ்நாடு அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைத்தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை நேற்று பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் 65 முறை நிலவுக்கு விண்கலன்களை அனுப்பி உள்ளன. அனைத்து நாடுகளும் நிலவில் பாலைவனங்களே உள்ளன என்று அறிவித்தன.

ஆனால் சந்திரயான் திட்டம் மூலம், நிலவின் துருவப்பகுதிகளில் 11 நவீன கருவிகள் வாயிலாக துல்லியமாக ஆராய்ந்து தண்ணீர் உள்ளதை முதன்முதலில் உலகிற்கு அறிவித்தது இந்திய விண்வெளித்துறை மட்டுமே.

விண்வெளி ஆய்வில் சிறந்து விளங்கும் நாடுகளில் முதல் 5 இடங்களுக்குள் இந்தியா இடம் பெற்றுள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக 55 முறை விண்கலன்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதில் அமெரிக்கா 5 முறையும், ரஷியா 9 முறையும் இடம்பெற்றுள்ளன. சீனா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய விண்கலன்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

ஆனால் மிகக்குறைந்த பட்ஜெட்டில் முதல்முறையாக இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலத்திட்டம் மாபெரும் வெற்றி பெற்றதாக கூறிய மயில்சாமி அண்ணாதுரை. மனிதர்கள் வாழ அடுத்த வாய்ப்பு நிலவாக இருக்கும்.

நம்முடைய கல்வி உலகளாவிய தேவைகளுக்காக இருக்க வேண்டும். கல்வி நிலையங்கள் அதற்கான முன்னெடுப்புகளை செய்ய வேண்டும். அப்போதுதான் நாம் விவசாயம் முதல் விண்வெளி வரை ஏராளமான தொழில் வாய்ப்புகளை உருவாக்க முடியும் என கூறினார்.