பேருந்தில் திருடிய இளைஞர் - அடிவாங்கி தந்த நண்பருக்கு கத்திக்குத்து
பேருந்தில் பயணியிடம் திருடிவிட்டு தப்பியோடியதுடன் தன்னை பொதுமக்களிடம் சிக்க வைத்து அடிவாங்கி தந்த நண்பரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணி மாயாண்டி காலனியை சேர்ந்தவர் ரகு என்பவர் நேற்று முன்தினம் திருவல்லிக்கேணி துலுக்கானம் முதல் தெருவில் தனது நண்பரான பானிப்பூரி என்ற வினோத்குமாருடன் கஞ்சா அடித்து கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் ரகுவின் வயிற்றில் தனது உடம்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் வினோத் குத்திவிட்டு தப்பியோடி உள்ளார். இதில் படுகாயமடைந்த ரகுவை, அவரது சகோதரி ரூபாவதி மீட்டு ஆட்டோ மூலமாக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ராயப்பேட்டை போலீசார் கத்தியால் குத்திய பானிப்பூரி என்ற வினோத் குமாரை கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில், ரகுவுடன் மயிலாப்பூருக்கு 12 ஜி மாநகரப் பேருந்தில் சென்றதாகவும், அப்போது திடீரென ரகு பேருந்தில் பயணி ஒருவரிடம் பிக்பாக்கெட் அடித்துவிட்டு தப்பியோடியுள்ளார்.
அப்போது அவருடன் சென்ற தன்னை பொதுமக்கள் பிடித்து தாக்கியதாக தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்து ரகுவிடம் ஏன் என்னை மாட்டிவிட்டாய் என கேட்டதற்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், பின்னர் கத்தியால் குத்தியதாக தெரிவித்துள்ளார். மேலும், ஏற்கனவே இருவரும் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட வினோத் குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.