தாயின் 2வது கணவரால் 2 வயது பெண் குழந்தைக்கு ஏற்பட்ட கதி
தூத்துக்குடி அருகே குடும்பத் தகராறு காரணமாக 2 வயது பெண் குழந்தை சுவற்றில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி காமராஜ் நகரில் வெல்டிங் பட்டறையில் வேலை செய்யும் கூலித் தொழிலாளி டேவிட் பினகாஸ் என்பவர் தனது முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
இதேபோல் மாப்பிள்ளையூரணியிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வரும் ஸ்டெபினாவும் கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் கணவரை பிரிந்து 5வயது குழந்தை கிறிஸ்டினா, 2 வயது குழந்தை கேத்தரீனா உடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
இதனிடையே டேவிட் பினகாஸ், ஸ்டெபினா இவர்கள் இருவரும் மேட்ரிமோனி மூலமாக பார்த்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் மனைவி ஸ்டெபீனா மீது சந்தேகப்பட்ட டேவிட் தொடர்ந்து மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
அந்த வகையில் நேற்று இரவும் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் டேவிட் பினகாஸ் ஆத்திரத்தில் தூங்கிக்கொண்டிருந்த ஸ்டெபீனாவின் 2 வயது குழந்தை கேத்தரீனாவை தொட்டிலுடன் பிடித்து சுற்றில் அடித்துள்ளார். இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இதனைத் தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தாளமுத்து நகர் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து டேவிஸ் புரம் சந்திப்பில் வைத்து தலைமறைவாக திரிந்த டேவிட் பினகாஸ் கைது செய்யப்பட்டார்.