டீக்கடைக்குள் புகுந்த சிறுத்தைக் குட்டி - பூனை என நினைத்து கொஞ்சிய மக்கள்
நீலகிரியில் டீக்கடை ஒன்றில் புகுந்த விலங்கை அங்குள்ள மக்கள் பூனை என நினைத்து தூக்கி கொஞ்சிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள பேருந்து நிலையத்தில் உள்ள டீக்கடை ஒன்றில் நேற்று மாலை பூனை போன்ற தோற்றம் கொண்ட விலங்கு ஒன்று வந்துள்ளது. உடலில் கொஞ்சம் சிவப்பான கோடுகளோடு திடகாத்திரமான உடல் அமைப்போடு இருந்துள்ள நிலையில் கடைக்காரரும் பால் குடிக்க பூனை வந்துள்ளதாக கருதி உள்ளார்.
சிறிய பாத்திரத்தில் அந்த விலங்கிற்கு பால் வைத்துள்ளார்.இதையடுத்து அங்கு வந்த மக்கள் அதை பூனை என்று கருதி சிலர் விலங்கோடு விளையாட முயன்றுள்ளனர்.
அப்போது கோபம் கொண்ட அந்த விலங்கு மக்களை கடிக்க பாய்ந்துள்ளது. ஒருவரின் கையில் லேசாக கடித்தும் வைத்துள்ளது. அப்போதுதான் அதனை அப்பகுதி மக்கள் உற்று பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அது பூனை அல்ல சிறுத்தை குட்டி என தெரிய வந்தது.
தகவலறிந்து உடனடியாக அங்கு வந்த வனத்துறையினர் அந்த சிறுத்தை குட்டியை காப்பாற்றி கொண்டு சென்றனர். இந்த சம்பவம் நீலகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.