தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை திரையிட எதிர்ப்பு - மாவட்ட ஆட்சியரிடம் புகார்..!
விவேக் அக்னிஹோத்திரி இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் 11-ஆம் தேதி வெளியானது தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம்.
இந்தத் திரைப்படம் காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி இந்துக்கள் காஷ்மீரத்தை விட்டு வெளியேறியவதை திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்தது.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர் கருத்துகள் கிளம்பின.இதனிடையே அரியானா, மத்தியப் பிரதேசம், குஜராத், கர்நாடகா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் இப்படத்திற்கு மாநில கேளிக்கை வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு உள்ள காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படம் சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்துவதாகவும்,
மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பல்வேறு காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் இதனால் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும்,
இத்திரைப்படத்திற்கு எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில் தமிழகத்தில் இத்தகைய திரைப்படங்களை திரையரங்குகளில் திரையிட அனுமதி தமிழக அரசு வழங்கக் கூடாது என ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் இத்தகைய திரைப்படத்தை வெளியிட அனுமதி வழங்க வேண்டாம் என வலியுறுத்தி கோரிக்கை மனுவினை எஸ்டிபிஐ கட்சியினர் வழங்கியுள்ளனர்