'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை காண அரை நாள் விடுமுறை - முதலமைச்சர் அறிவிப்பு..!
விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் வெளியான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தை காண மாநில அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை பெறலாம் என அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.
காஷ்மீரில் 1990-களில் இந்து பண்டிட்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதையும், தீவிரவாதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பண்டிட்கள் அங்கிருந்து வெளியேறிய சம்பவங்களையும் அடிப்படையாக கொண்டு 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகியது.
இப்படத்தில் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷ், தர்ஷன் குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தை காண மாநில அரசு ஊழியர்கள் அரை நாள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் எங்கள் அரசு ஊழியர்கள் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தை பார்க்க சிறப்பு அரை நாள் விடுமுறைக்கு தகுதியுடையவர்கள் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அவர்கள் தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு டிக்கெட்டுகளை மறுநாள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
"காஷ்மீரி பண்டிட் இனப்படுகொலை மற்றும் அவர்களின் வெளியேற்றம் மனிதகுலத்தின் மீது ஒரு கறை. 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' இல் அவர்களின் அவலநிலையின் இதயத்தை பிளக்கும் சித்தரிப்பால் தூண்டப்பட்டது,
இதை நான் எனது அமைச்சரவை சகாக்கள் மற்றும் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து பார்த்தேன்," என்று அவர் தெரிவித்துள்ளார்.