சாப்பாடு கொடுக்காததால் மனைவி மீது நாட்டு வெடிக்குண்டு வீசிய கணவன் கைது!
தென்காசி அருகே மனைவி மீது நாட்டு வெடி குண்டு வீசி கொலை செய்ய முயன்ற கணவனின் செயலால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சாப்பாடு கொடுக்காததால் நாட்டு வெடிக்குண்டு வீசிய கொடூரம்
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள கொல்லம் பகுதியில், கலைஞர் காலனியில் வசித்து வருபவர்கள் சந்தனகுமார் - கௌசல்யா தம்பதியினர்.
கடந்த செவ்வாய்க்கிழமை, அந்த பகுதியில் திருவிழா நடைபெற்று கொண்டிருந்தது, அதனால் திருவிழாவிற்கு கிளம்பியுள்ளார் கௌசல்யா. அப்பொழுது அங்கு வந்த இவரது கணவர், சாப்பாடு போடும்படி கேட்டுள்ளார். கௌசல்யா அவசரமாக கிளம்பியதால் 'வேணும்னா போட்டு சாப்பிடுங்க' என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கணவன், வீட்டில் தயாரித்து வைத்திருந்த நாடு வெடி குண்டை அவர் மீது வீசியுள்ளார்.
பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது, காயமடைந்த அவர் அங்கு உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் அவருக்கு தலையில் 8 தையல்கள் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் அவரை கைது செய்தனர், மேலும் அவருக்கு வெடிகுண்டு எப்படி கிடைத்தது என்று விசாரிக்கையில்,
காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்காக வைத்திருந்தேன் என்றும், வாக்குவாதம் ஏற்பட்டதால் கோபத்தில் அதனை மனைவி மீது வீசினேன் என்றும் கூறியுள்ளார்.