3 லட்சம் பேருக்கு பட்டா வழங்குவது அரசின் இலக்கு சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று மானியக் கோரிக்கை விவாதங்களுடன் தொடங்கியது. முதல் நாளான இன்று நீர்வளத் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது.
இதற்கு துறையின் அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார். காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது.
சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விக்கு வேளாண் துறை அமைச்சர்கள்,உழவர் நலன் துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் மூதாதையர் காலத்தில் இருந்து வசித்து வரும் மக்களுக்கு தற்போது குடியிருப்பவர்களுக்கு நேரடியாக வாரிசு அடிப்படையில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமசந்திரன், மூதாதையர் காலத்தில் இருந்து வசிக்கும் நிறைய இடங்களுக்கு பட்டா மாறுதல் இல்லாமல் இருக்கிறது.
அதனை சரிசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வாரிசுகளின் எண்ணிக்கைகளைக் கருத்தில் கொண்டு அது சரிசெய்யப்பட நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.
மேலும் கடந்த ஆண்டும், இந்த ஆண்டுக்கும் சேர்த்து 3 லட்சம் பேருக்கு பட்டா வழங்க வேண்டும் என்று வருவாய்த்துறைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுவரை அரசு தரப்பில் பட்டா வழங்கப்படும்போது சர்வே செய்து கொடுப்பது இல்லை. நிகழ்ச்சிகளில் பட்டா என்ற பெயரில் ஒரு பேப்பரை கையில் கொடுத்துவிடுவோம்.
அந்த இடத்தை பயனாளிகளுக்கு காட்டுவதுமில்லை. இந்தமுறை அதுபோல இல்லாமல், பயனாளிகளுக்கு இடத்தைக் காட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.