தி பேமிலி மேன் 2 இணையத்தொடரை ரத்து செய்ய வேண்டும்... சீமான் எச்சரிக்கை
தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் தி பேமிலி மேன் 2 இணையத்தொடர் ஒளிபரப்புவதை ரத்து செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமேசான் பிரைம் இணையத்தளத்தில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிற, ‘தி பேமிலி மேன் 2’ எனும் இணையத்தொடரின் முன்னோட்டமும், அதில் இடம்பெற்றிருக்கிற காட்சியமைப்புகளும் பேரதிர்ச்சி தருகின்றன.
தமிழர்களை வன்முறையாளர்களாகக் காட்ட முற்படும் இத்தொடர் முழுக்க முழுக்க உள்நோக்கத்தோடும், தமிழர்கள் மீதான வன்மத்தோடும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. சட்டப்போராட்டம் வாயிலாகவும் உலகரங்கில் நீதிகேட்டு நிற்கிற தமிழர்களைத் திரைப்படத்தொடரின் வாயிலாகத் தீவிரவாதிகளெனக் காட்ட முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழர்களைத் தவறாகத் தோற்றம் கொள்ளச்செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிற இத்தொடரின் முன்னோட்டம் வெளியான உடனே உலகெங்கும் வாழும் தமிழர்கள் பெரும் கோபத்துடனும், கொந்தளிப்புடனும் எதிர்வினையையும், கண்டனத்தையும் பதிவுசெய்து வருகின்றனர். எனவே இத்தொடரை ஒளிபரப்புவதை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துவதாக சீமான் தெரிவித்துள்ளார்.