சிதம்பரத்தில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது மாணவனை இழுத்துச் சென்ற முதலை
சிதம்பரம் அருகே குளித்துக் கொண்டிருந்த போது ஐடிஐ மாணவரை முதலை இழுத்துச் சென்று தாக்கியதில் மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மாணவனை இழுத்துச் சென்ற முதலை
சிதம்பரம் வேளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலை 18 வயதான இவர் சிதம்பரத்தில் உள்ள அரசு ஐடிஐயில் படித்து வந்தார்.
இன்று மாலை அவரின் நண்பர்கள் இருவருடன் பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் ஏதே சத்தம் கேட்டுள்ளது.
ஆற்றில் முதலைகள் இருப்பதை அறிந்த அவர்கள் கரைக்கு திரும்பியுள்ளனர். திருமலை குளிக்க பயன்படுத்திய சோப்பு ஆற்றின் கரையோரத்தில் விழுந்துள்ளது.
இதை எடுக்க திருமலை சென்ற போது அவரின் காலை முதலை பிடித்து இழுத்துள்ளது. இதையறிந்த அவரின் நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் முதலையை சத்தமிட்டு விரட்டியுள்ளனர்.அதை பொருட்படுத்தாத அந்த முதலை மாணவனை ஆற்றிற்குள் இழுத்துச் சென்றுள்ளது.
புதரில் மாணவன் சடலமாக மீட்பு
பின்னர் இதுகுறித்து பொதுமக்கள் தீயணைப்பு மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து தீயணைப்புத்துறையினர் மற்றும் வனத்துறையினர் கொள்ளிடம் ஆற்றில் திருமலையை தேடிய நிலையில் 2 மணி நேரத்திற்கு பிறகு அவரது உடல் ஒரு புதரில் கண்டெடுக்கப்பட்டது.
பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இப்பகுதியில் தொடர்ந்து முதலை தாக்குதலாக உடல் உறுப்புகளை இழந்தவர்கள், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.