கிரிக்கெட்டிலும் களமிறங்கிய தாலிபான் அணி - அதிர்ச்சியில் ரசிகர்கள்
ராஜஸ்தானில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் தாலிபன் கிரிக்கெட் கிளப் என்ற பெயரில் ஒரு அணி இருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கடந்த இரு வாரங்களாகவே ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்டதால் அங்கு தாலிபான் தீவிரவாதிகள் உள்நாட்டு போர் நடத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதே எங்கு பார்த்தாலும் பேசுபொருளாக உள்ளது. உயிருக்கு பயந்து மக்கள் ஒருபுறம் ஆப்கானை விட்டு வெளியேறி வரும் நிலையில், மறுபுறம் மீம்ஸ்களும் பறக்கின்றன.
ஒவ்வொரு பதவியிலும் தாலிபான் தீவிரவாதிகள் அமர்ந்தால் நாடு எப்படி இருக்கும் என்பதை கற்பனையாக இணையவாசிகள் பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே இந்தியாவிலும் தாலிபான்களுக்கு ஆதரவாக உள்ள மக்களை கண்காணிக்கும் பணியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் நிலையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் அருகே உள்ள பானியானா என்ற கிராமத்தில் உள்ளூர் மக்களை கொண்டு கிரிக்கெட் தொடர் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்ற அணிகளில் ஒன்றுக்கு "தாலிபன் கிரிக்கெட் கிளப்" என்ற பெயரில் களமிறங்கியது. ஆப்கான் விவகாரம் லீக் போட்டிகள் நடந்தவரை போட்டி நடத்தியவர்களுக்கு தெரியவில்லை.
ஒரு கட்டத்தில் தாலிபான் பற்றிய பேச்சு மக்களிடையே எழுந்த போது இப்படியான பெயர் கொண்ட அணியை விளையாட அனுமதித்தே தவறு என போட்டி அமைப்பினர் உணர்ந்தனர். இதனால் கிரிக்கெட் தொடரில் இருந்து "தாலிபன் கிரிக்கெட் கிளப்" அணி நீக்கப்பட்டுள்ளது.