தொடரும் ஒப்பந்த செவிலியர்களின் போராட்டம் - சேலத்தை தொடர்ந்து சென்னையில் குவிந்த செவிலியர்கள்
கொரோனா சமயத்தில் ஒப்பந்த முறையில் செவிலியர்களுக்கு வேலை கொடுத்திருந்த நிலையில் தற்போது அந்த வேலையை நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடரும் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
திடீர் என கொரோனா அதிகரித்த சமயத்தில் மருத்துவமனைகளுக்கு செவிலியர்கள் தேவைப்பட்ட நிலையில் தற்காலிகமாக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் சுமார் 2,300க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தற்போது அந்த பணிக்கால ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், மேலும் பணி நீடிப்பு இல்லை என்று கடந்த சனிக்கிழமை அரசு ஆணை வெளியிட்டது. இதற்க்கு ஒப்பந்த செவிலியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது.
சேலத்தில் மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்களுக்கு இன்று அனுமதி தரவில்லை, ஆகவே வேறுவழிகளில் போராட்டம் தொடரும் என தெரிவித்திருந்தனர்.
சேலத்தை தொடர்ந்து சென்னையில் கூடிய செவிலியர்கள்
அதேபோல் , திடீரென 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் சென்னையில் உள்ள தேனாம்பேட்டை, மருத்துவத்துறை அலுவலகத்தில் திரண்டடு தங்களின் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
காவல்துறையினர் செவிலியர்களிடம் போராட்டத்தை கைவிடக்கோரி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாகவே, பணி நீட்டிப்பு பெறாத ஒப்பந்த செவிலியர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையகளில் மாற்றுப்பணி வழங்கப்படும் என்றும் அதேநேரத்தில் பணி நிரந்தரம் செய்வதற்கான வாய்ப்பு குறைவு என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.