கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது காமன்வெல்த் போட்டி - பதக்கங்களை குவித்த இந்தியா..!
பர்மிங்காமில் நடந்து வந்த காமன்வெல்த் போட்டிகள் வண்ணமிகு வாணவேடிக்கை மற்றும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று நிறைவடைந்தது.
இங்கிலாந்தின் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 28ந்தேதி தொடங்கியது. இதில் 72 நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றள்ளனர். காமன்வெல்த் போட்டிகள் நேற்றுடன் நிறைவு பெற்றது.

பதக்கங்களை குவித்த இந்தியா
இந்த போட்களின் முடிவில் ஆஸ்திரேலியா 67 தங்கம், 57 வெள்ளி, 54 வெண்கலம் என 178 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது.

இங்கிலாந்து 57 தங்கம், 66 வெள்ளி, 53 வெண்கலம் என 176 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தையும், கனடா 26 தங்கம், 32 வெள்ளி, 34 வெண்கலம் என 92 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.
தமிழக வீரர்கள் சாதனை
தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் 3 தங்கம் உட்பட 4 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். 40 வயதாகும் சரத் கமல் தற்போதும் கூட இளம் வீரர்களுக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் விளையாடி வருகிறார்.
இந்த காமன்வெல்த் போட்டியில் அவர் முதலில் டேபிள் டென்னிஸ் ஆடவர் குழு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
அதைத் தொடர்ந்து ஆண்கள் இரட்டையர் பிரிவில் சக தமிழக வீரர் சத்யன் உடன் இணைந்து வெள்ளியும், கலப்பு இரட்டையர் பிரிவில் ஸ்ரீஜா அகுலா-வுடன் இணைந்து மற்றொரு தங்கமும் வென்றார்.
இதை தொடர்ந்து இன்று இறுதியாக நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் அவர் மீண்டும் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த போட்டிகளில் மட்டும் 3 தங்கம், 1 வெள்ளி என மொத்தம் 4 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
2வது முறையாக தங்கம் வென்ற பி.வி.சிந்து
பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து கனடா வீராங்கனை மிச்செல் லியை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் கனடா வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றார். காமன்வெல்த் போட்டிகளில் இது அவரின் 2வது தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
நிறைவு விழா
இந்நிலையில் காமன்வெல்த் போட்டி நிறைவு விழா பர்மிங்காமில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இதில், பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகள் நிறைவடைந்ததை இளவரசர் எட்வர்ட் முறைப்படி அறிவித்தார். அடுத்த காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நகரில் 2026 ஆம் ஆண்டு நடைபெறுகிறது.
பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் வகையில் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளும் இதில் இடம் பெற்றன.

நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய தேசியகொடியை டேபிள் டென்னிஸ் வீரர் அச்சந்தா ஷரத் கமல் மற்றும் குத்துச்சண்டை வீரர் நிகத் ஷரீன் ஆகியோர் ஏந்தி இந்திய அணியை வழிநடத்தி சென்றனர்.