கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகு இன்று தலைமைச் செயலகம் செல்கிறார் முதலமைச்சர்...!
கொரோனா தொற்றால் இருந்து குணமடைந்த பிறகு இன்று தலைமை செயலாகம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சருக்கு கொரோனா
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீப காலமாக பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், அரசு திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் வந்தார்.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்றபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதாவது, கடந்த 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவலில், தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
பின்னர் 14ஆம் தேதியன்று காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சில நாட்கள் ஓய்வெடுத்த அவர் 18ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அன்று தலைமைச்செயலகத்துக்கு வந்து குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்கை செலுத்தினார்.
தலைமை செயலகம் செல்லும் முதலமைச்சர்
அதன்பின்னர், சில நாட்களாக தலைமைச்செயலகத்திற்கு வராமல் முகாம் அலுவலகத்தில் இருந்தபடி அரசு பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்திற்கு வருகிறார். இன்று காலை 10.30 மணிக்கு நிதித்துறை திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தை நடத்துகிறார்.
அதைத்தொடர்ந்து 44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.