விளையாடும் போது புதரில் விழுந்த பந்து... எடுக்க சென்ற சிறுவன்.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி
கோவையில் புதரில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் பாம்பு கடித்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வடிவேல் முத்து என்பவrன் 12 வயது மகனான மணிவேல் கம்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் அவர் கோவை துடியலூர் டி.வி.எஸ் நகர் பகுதியில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு கடந்த 2 நாட்களுக்கு முன் சென்றுள்ளான்.
அங்கு வீட்டின் மொட்டை மாடியில் சிறுவன் பந்து வீசி விளையாடிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அப்போது பந்து மாடியில் இருந்து வீட்டின் அருகே உள்ள புதருக்குள் விழுந்துள்ளது. அதனை எடுக்க மணிவேல் சென்றபோது புதருக்குள் இருந்த கொடிய விஷப்பாம்பு சற்றும் எதிர்பாராத விதமாக கையில் கடித்துள்ளது. இதனால் வலியில் துடித்த சிறுவனை உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆபத்தான கட்டத்தில் சிறுவன் அதிதீவிர அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில் மணிவேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.