ஸ்ரீமதி உடல் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டுள்ளது - மாணவின் தந்தை..!
இதுவரைக்கும் எங்களுக்கு நீதி கிடைக்கல..இனிமேல் தான் நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கையோடு இருக்கிறேன் மாணவியின் தந்தை இராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
இறுதி அஞ்சலி
கள்ளக்குறிச்சி மாணவி உடலை இன்று காலை மாணவியின் பெற்றோர் பெற்றுக்கொண்ட நிலையில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதையடுத்து உறவின் முறைபடி மாணவியின் தாய்மாமன் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து தாய் மற்றும் தந்தை கதறலுக்கு இடையே மாணவிக்கு இறுதி சடங்குகளை மாணவியின் உறவினர்கள் செய்தனர்.
தொடர்ந்து மாணவியின் இறுதி ஊர்வலத்தில் அமைச்சர் கணேசன், மாவட்ட ஆட்சியர், ஊர் பொதுமக்கள் மற்றும் பல அரசியல் கட்சி உள்ளூர் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் உடல் பெரியநெசலுார் கிராம மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சில சாஸ்திர முறைப்படி சடங்குகள் செய்த பின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மாணவியின் தந்தை பேட்டி
உடல் அடக்கம் செய்யப்பட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த மாணவியின் தந்தை இராமலிங்கம் இதுவரைக்கும் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை..இதன் பின் தான் நீதி கிடைக்கும் என்று நம்புவதாக பேசினார்.
மேலும் நீதி வேண்டும்..அவர்களுக்கு மரண தண்டனை வேண்டும்.தனது மகளின் மரணத்திற்கு பள்ளியில் உள்ள 7 பேர் தான் சம்மந்தப்பட்டவர்கள்.
எனது மகளை புதைக்கவில்லை..விதைத்திருக்கிறேன் என்ற அவர், விதை மரமாக வந்து அவர்களது குடும்பத்தை வேரருக்காமல் விடாது.
மாணவின் மரணத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் ஆரம்பத்தில் மந்தமாக இருந்ததாகவும், ஆனால் தற்போது வேகமாக செயல்படுவதாகவும், இதே வேகத்தில் செயல்பட்டால் ஒரே மாதத்தில் கொலையாளிகளை கண்டு பிடித்துவிடலாம் என்றார்.
நாங்கள் வன்முறையில் ஈடுபடவில்லை யாரையும் வன்முறை செய்ய துாண்டவும் இல்லை என்ற அவர், கைது செய்யப்பட்டுள்ள பள்ளி மாணவர்களை விடுவிக்க வேண்டும்.
என் பிள்ளைக்கு நடந்த கொடுமை இந்தியாவில் வேற எந்த பிள்ளைக்கும் நடக்க கூடாது என்றார்.