பிலிப்பைன் நாட்டில் உயிரிழந்த மருத்துவ மாணவரின் உடல் அரசு செலவில் தமிழகம் வந்தடைந்தது
பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சார்ந்த சஷ்டிகுமார் உடல் அரசு செலவில் தமிழகம் கொண்டுவரப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ராசிங்கபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் பாலசேகரன். இவருடைய மகன் சஷ்டிகுமார். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஏஎம்ஏ மருத்துவ கல்லூரியில் மருத்துவ பட்டப்படிப்பு பயில சென்றிருந்தார்.
கடந்த ஜனவரி 15ம் தேதி காலை அருவியில் குளிக்கச் சென்றபோது சஷ்டிகுமார் திடீரென்று நீரில் மூழ்கி இறந்தார். அவருடைய உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உரிய ஏற்பாடுகளை செய்திடுமாறு முன்னாள் துணை முதலமைச்சரும், தற்போதைய பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து, ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறையுடன் ஒருங்கிணைந்து இதை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை எடுத்து விடுமாறு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தானுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோருக்கும் முதலமைச்சர் அறிவித்தார்.
இந்நிலையில், உயிரிழந்த சஷ்டிகுமார் உடலை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர தேவையான அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகள், தமிழ்நாடு அரசின் தமிழர் நல ஆணையத்தின் மூலம் ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திடம் இணைந்து மேற்கொண்டது.
இதனையடுத்து, இன்று அதிகாலை 2.15 மணி அளவில் சஷ்டிகுமார் உடல் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து விமானம் மூலம், சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. இதன் பின்னர், அந்த உடல் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சஷ்டிகுமார் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர சிறப்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.4 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
உடலை அவருடைய சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தமிழ்நாடு அரசின் கட்டணம் அமரர் ஊர்தி வாகன சேவையும் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. இந்நிலையில், துயர சம்பவத்தில் உயிரிழந்த சஷ்டிகுமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருக்கிறார்.