விசிக மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு - ஏமாற்றம் அளிக்கிறது திருமாவளவன்
விசிக நடத்தும் மனித சங்கிலி போராட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது ஏமாற்றம் அளிப்பதாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தடை விதித்தது ஏமாற்றம் அளிக்கிறது
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அக்டோபர் 2-ம் தேதி காந்தி பிறந்த நாளில் ஆர்எஸ்எஸ் தமிழகத்தில் 50 இடங்களில் அணிவகுப்பு நடத்த போவதாக அறிவித்தது.
அதற்கு நீதிமன்றம் காவல்துறைக்கு வழிகாட்டுதலை தந்துள்ளது. அதன்படி 28ம் தேதிக்குள் காவல் துறை அனுமதி வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இன்று தமிழ்நாடு அரசு ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கும், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் முன்மொழிந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்திற்கும் தடை விதித்து இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்திற்கு ஏராளமான அரசியல் இயக்கங்களும், மனித உரிமை அமைப்புகளும், சமூக நீதி இயக்கங்களும் ஆதரவு தெரிவித்த நிலையில் தடை விதித்து இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
இந்த தடைக்கு எதிராக நாங்கள் சட்டப்படி அணுகி அனுமதி பெற்று இந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தை நடத்துவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
காவல்துறையில் மீண்டும் நாங்கள் மனு கொடுக்க இருக்கிறோம். ஆர்எஸ்எஸ் நடத்துகிற 50 இடங்களில் நாங்களும் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்கிற அச்சம் அரசுக்கு இயல்பாக எழத்தான் செய்யும்.
அந்த 50 இடங்களில் அனுமதி மறுத்தால் சரி, நாங்கள் அறிவித்த தமிழ்நாடு தழுவிய பேராட்டத்தை அனைத்து ஒன்றிய தலைநகரங்களிலும், ஒன்றிய தலை நகரங்களிலும் நடைபெறுவதாக அறிவித்த நிலையில் ஒட்டு மொத்தமாக தடை விதித்து இருப்பது சற்று ஏமாற்றத்தை தருகிறது.
அனுமதிக்க வேண்டும்
50 இடங்கள் போக மிச்சம் உள்ள இடங்களில் நாங்கள் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறையின் தலைமை இயக்குநரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் என்பது சமூக அமைதியை நிலை நாட்டுவதற்கு ஒரு அடையாள போராட்டம்.
ஆகவே ஆர்எஸ்எஸ் நடத்துவதாக தெரிவித்த 50 இடங்களை தவிர மற்ற இடங்களில் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் திருமாவளவன்.